விடுதி அறையில் சடலமாக கிடந்த கல்லூரி மாணவி.. போலீசார் தீவிர விசாரணை!!

939

புவனேஸ்வரில்..

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் கோதபட்னாவில் தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். அதன்படி இந்த கல்லூரியில் படிக்கும் அர்ச்சனா தாஸ் என்ற பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் பிரிவு இரண்டாம் ஆண்டு மாணவி, விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார்.



இந்த நிலையில், கல்லூரியில் தேர்வு முடிந்து விடுதிக்கு திரும்பிய பிறகு மாணவி அர்ச்சனா தாஸ், தனது அறையில் சேலையில் தூக்குப்போட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

கல்லூரி நிர்வாகம் மாணவி மரணம் குறித்த தகவல் அறிந்தவுடன், அவரது உடலை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை அர்ச்சனா தாஸ், குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அர்ச்சனா தாஸ் குடும்பத்தார், சந்தக காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டதாக எழுந்த புகாரால் புவனேஸ்வரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவரது செல்போனை ஆய்வுக்கு உட்படுத்தி அவரது தோழிகளிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து இறந்து போன மாணவியின் சகோதரி ரெபதி பாதே கூறுகையில், அர்ச்சனா தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவள் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அதன் பின்னணியில் சதி உள்ளது. அவள் தேர்வுக்காக நேற்று வீட்டிலிருந்து விடுதிக்கு திரும்பியிருந்தாள். தேர்வு எழுதிய உடனே ஏன் அவள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?, என்று கேள்வி எழுப்பினார்.