தெலங்கானாவில்..தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் நவ்யா ஸ்ரீ. இவர் 2021இல் கர்ப்பிணியாக இருந்த நிலையில், இவரது பிரசவம் ஜெகத்தியால் என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நிகழ்ந்தது.
2021 டிசம்பரில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்த இவர், பிரவத்திற்குப் பின் தொடர்ச்சியாக வயிற்று வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். பேறுகாலத்தில் இயல்பாக வரும் வலி என்று நினைத்திருந்த நவ்யா ஸ்ரீ, முதலில் சில அன்றாட சிகிச்சைகள் எடுத்து வந்துள்ளார்.
இருப்பினும் வயிற்று வலி நிற்காமல் தொடர்ந்த நிலையில், நிசாமாபாத் பகுதியில் உள்ள ஸ்கேன் பரிசோதனை நிலையில் தனது வயிற்றை பரிசோதித்துள்ளார். அப்போது அவரது வயிற்றில் கட்டி போல பாதிப்பு இருப்பதாக முடிவுகள் தெரிவித்ததை அடுத்து, ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது மருத்துவர்கள் பரிசோதித்த போது தான் வயிற்றில் பஞ்சுத்துணி வைத்து தைக்கப்பட்டிருந்த அதிர்ச்சி உண்மை அம்பலமானது. பின்னர் மருத்துவர்கள் உடனடியாக பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து பஞ்சை வெளியேற்றினர்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து பெண் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். இது தொடர்பாக தவறு செய்த மருத்துவமனை மீது பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்தனர். மேலும், பெண்ணின் வயிற்றில் சீல் உருவாகியுள்ளதால் உரிய சிகிச்சை ஓய்வு தேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.