சோமாலியாவில் 2 இலட்சம் குழந்தைகள் உணவின்றி இறக்கும் அபாயம்!!

795

Somalia

ஆபிரிக்க நாடான சோமாலியாவுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு வழங்கி வரும் நிதியுதவி குறைக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டில், இரண்டு இலட்சம் குழந்தைகள் இறக்கும் என யுனிசெப் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு தீவிரவாதம், வறட்சி, வெள்ளம் போன்றவற்றால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவில், 70 சதவீதம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு அங்கமான யுனிசெப் உணவு வழங்கி வருகிறது.

முந்தைய ஆண்டுகள் போல் இல்லாமல், இந்த ஆண்டில், சோமாலியாவுக்கு மிகக் குறைந்த அளவே உணவு மற்றும் மருந்து பொருட்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டில் தட்டுப்பாடு ஏற்பட்டு, மருந்துகள், உணவுப்பொருட்கள் போதுமான அளவில் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரை, 10 சதவீத நிதி தான் அளிக்கப்பட்டுள்ளதால், நிலைமை அங்கே மோசமாக உள்ளது. இது குறித்து, சோமாலியாவில், யுனிசெப் அமைப்பின் செய்தித் தொடர்பாளர், கிறிஸ்டோப் பவுலிரெக் கூறியதாவது,

உடனடியாக போதுமான நிதி கிடைக்காவிட்டால், பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் மற்றும் பெண்களுக்கு மருத்துவ உதவிகள், அத்தியாவசிய சத்துணவுகள் வழங்க முடியாத நிலை ஏற்படும்.

இதனால் இந்த ஆண்டில், இரண்டு இலட்சம் குழந்தைகள் பலியாகக் கூடும். ஏற்கனவே, 5 வயதுக்கு குறைந்த 50 ஆயிரம் குழந்தைகள் சத்து குறைபாட்டால் அவதிப்படுகின்றன.

வயிற்றுப் போக்கிற்கான மருந்து, நிமோனியா காய்ச்சல் தடுப்பு மருந்து, நோய் எதிர்ப்பு மருந்துகள், ஆறு இலட்சம் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது. நிதி இல்லாததால், அந்த சேவை, எந்நேரத்திலும் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கர்ப்பணி பெண்கள், 2.8 இலட்சம் பேருக்கு, பிரசவத்திற்கு முந்தைய மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படவில்லை. நிதி குறைப்பால், யுனிசெப் அமைப்பிலும் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.