சேலத்தில்..
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேசன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். கூலித்தொழிலாளியான இவருக்கு கவின் (வயது 2) என்ற மகன் இருக்கிறார்.
இன்று காலை கவின் வீட்டுக்கு அருகே மற்ற சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரைக் காணவில்லை. இதையறிந்த சிறுவனின் பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்காததால், வாழப்பாடி காவல் நிலையத்தில் `தங்களுடைய மகன் காணவில்லை’ என்று நேற்று மாலை புகாரளித்தனர்.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார், வாழப்பாடி டி.எஸ்.பி ஹரி சங்கரி, இன்ஸ்பெக்டர் உமாசங்கர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து குழந்தையை மீட்க உத்தரவிட்டார்.
அதன் மூலம் போலீஸார் சிறுவன் மாயமான பகுதியில் விசாரணை நடத்தியபோது, சிறுவன் வீட்டிலிருந்து 10 அடி தூரத்தில் லெட்சுமி என்பவர் வசித்துவருவதும், அவருக்கு இரண்டு வயதில் குழந்தை இருப்பதும் தெரியவந்தது.
அந்த இரண்டு சிறுவர்களும் அவ்வப்போது விளையாடச் செல்வதும் தெரியவந்தது. இதற்கிடையே, நேற்று முதல் நாள் சம்பந்தப்பட்ட லெட்சுமி வீட்டுக்கு சேலத்தைச் சேர்ந்த உறவினர் பெண் வந்து சென்றிருக்கிறார்.
அதே பெண் நேற்றும் சிறுவன் காணமல் போன நேரத்தில் அங்கு வந்திருப்பதை அருகிலிருந்தவர்கள் கவனித்திருக்கின்றனர். ஆனால், வந்த உறவுக்கார பெண் லெட்சுமி வீட்டுக்குச் செல்லாமல் சென்றிருக்கிறார்.
இதனால் போலீஸார் சந்தேகமடைந்து, லெட்சுமியை விசாரித்து அவரின் உறவுக்காரப் பெண்ணின் செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டு பேசியிருக்கின்றனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே, அவரிடம் போலீஸார் பேசி சம்பவ இடத்துக்கு வரவழைத்திருக்கின்றனர்.
பின்னர் அவரிடம் போலீஸார் விசாரணையைத் தொடங்கவே, தன்னுடைய பெயர் பழனியம்மாள் என்றும், திருமணமாகி கணவனைப் பிரிந்து வாழ்வதாகவும், தான் சேலம் 5 ரோடு பகுதியிலுள்ள (ஐநாக்ஸ்) திரையரங்கில் தூய்மைப் பணியாளராக வேலை பார்ப்பதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் அயோத்தியாபட்டினம் அக்ரஹாரம் பகுதியில் தான் ரூ. 20 லட்ச ரூபாய்க்கு கடன் வாங்கி வீடு கட்டியிருப்பதால், அதை அடைக்க வேறு வழிதெரியாமல் சிறுவனைக் கடத்தியதாகக் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் அந்தப் பெண், கடத்தப்பட்ட சிறுவனைத் தன்னுடன் வேலை பார்க்கும் 5 ரோடு பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரின் வீட்டில் வைத்திருப்பது தெரியவந்து, போலீஸார் சிறுவனை மீட்டனர்.
பின்னர் பழனியம்மாளைக் கைதுசெய்து சிறையிலடைத்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட பழனியம்மாளை போலீஸார் கஸ்டடியில் எடுத்து, சிறுவனைக் கடத்தி வேறு யாருக்கும் விற்க முற்பட்டாரா, சிறுவனைக் கடத்தி பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்ட திட்டம் வைத்திருந்தாரா…
மேலும், இது போன்ற குற்றச்சம்பவத்தில் ஏற்கெனவே ஏதும் ஈடுபட்டிருக்கிறாரா… இவர் பின்னணியில் ஏதும் கடத்தல் கும்பல் உள்ளதா… என்ற கோணத்தில் விசாரணை நடத்தவிருக்கின்றனர்.