வவுனியாவில் நாளை ஹர்த்தாலா : குழப்பத்தில் மக்கள்!!

1962

வவுனியாவில் ஹர்த்தால் தொடர்பில் சில பொது அமைப்புக்கள் தீர்க்கமான முடிவினை அறிவிக்காமையினால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் மற்றும் பௌத்தமயமாக்கல் என்பவற்றுக்கு எதிராக நாளை (25.04) செவ்வாய்கிழமை வடக்கு – கிழக்கு பகுதியில் பூரண ஹர்த்தாலுக்கு 7 தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் சில பொது அமைப்புக்கள் அழைப்பு விடுத்திருந்தன.

இந்நிலையில் இன்றைய தினம் (24.04) ஹர்த்தால் நடவடிக்கைக்கு ஆதரவு கோரி வவுனியாவில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.



தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளில் வவுனியா மாவட்டத்தை உள்டக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகிய 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

அத்துடன் வவுனியா மாவட்ட வர்த்தக சங்கம், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், மொத்த வியாபாரிகள் சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம் என எந்த அமைப்புடனும் அவர்கள் பேசவில்லை.

அவர்களது கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திய சில முன்னாள் மாகாண சபை மற்றும் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்களே ஹர்த்தால் அழைப்பினை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த ஹர்த்தாலுக்கு வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், சிகையலங்கரிப்பாளர் சங்கம், பதிப்பாளர் கூட்டுறவுச் சங்கம் என்பன,

பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன், மொத்த விற்பனையாளர் சங்கம் (மரக்கறி), வர்த்தக சங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் என்பன தமது முடிவிவை தெளிவாக அறிவிக்கவில்லை.

இது தொடர்பில் அவர்களிடம் கேட்ட போது, அவர்கள் அதற்கு தெளிவான பதிலை வழங்க மறுத்து விட்டனர். இந்நிலையில் நாளைய தினம் (25.05) வர்த்தக நிலையங்களில் வேலை செய்வோர்,

மரக்கறிகளை கொண்டு செல்வோர், விவசாயிகள், பொது மக்கள் எனப் பலரும் வர்த்தக நிலையங்கள் திறக்குமா?, திறக்காதா என்ற குழப்பத்தில் உள்ளனர்.