வவுனியாவில் கர்த்தால் தொடர்பில் வெளியான முக்கிய துண்டுப்பிரசுரம்!!

2371

வடக்கு கிழக்கில் நாளையதினம் கர்த்தால் நடைபெறவுள்ள நிலையில் ஊழியர் நலன்புரி சங்கத்தினரினால் இன்று (24.04.2023) மாலை வர்த்தக நிலையங்களுக்கு துண்டுப்பிரசுரமொன்று விநியோகிக்கப்பட்டுள்ளது.

குறித்த துண்டுப்பிரசுரத்தில் நாளை கடை அடைப்பா? அல்லது கடை திறப்பா? அன்பான வவுனியா வாழ் வர்த்தகர்களே, பேருந்து உரிமையாளர்களே, முச்சக்கர வண்டி உரிமையாளர்களே, சிகை அலங்கரிப்பு உரிமையாளர்களே! உங்களிடம் தாழ்மையான வேண்டுகோள்,

நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் நாளைய தினம் தனிப்பட்ட அரசியல் நோக்கத்திற்காக நடைபெறவுள்ள கதவடைப்பால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.



இதனை கருத்தில் கொண்டு நாளைய தினம் நடைபெறவுள்ள கதவடைப்பிற்கு ஆதரவு வழங்க வேண்டாம் என்பதை தாழ்மையாக கேட்டுக் கொள்கின்றோம்.

குறிப்பு:- இந்த கதவடைப்பை ஏற்பாடு செய்துள்ள அரசியல் கட்சிகள், அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்காக இதுவரை உண்ணாவிரதமோ இல்லை பாராளுமன்ற பகிஷ்கரிப்போ செய்ததில்லை. இதற்காக நீங்கள் ஏன் ஆதரவு வழங்க வேண்டும்?

பல்கலைக்கழக மாணவர்களே இதே கதவடைப்பை செய்கின்ற அரசியல்வாதிகள் 1972 யாழ் பல்கலைக்கழகம் வருவதை தடை செய்து கறுப்பு கொடி கட்டி கதவடைப்பு செய்ய முன்வந்தவர்கள். இவர்களுக்கு ஏன் ஆதரவு வழங்க வேண்டும்?

2009 முள்ளிவாய்க்காலில் மக்கள் அவதிப்படும் போது இதே அரசியல்வாதிகள் அனைவரும் வெளிநாடுகளில் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அப்போது ஏன் ஒரு ஆர்ப்பாட்டமோ உண்ணாவிரதமோ இருக்கவில்லை?

நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்து இருக்கும் போது ஏன் இந்த கதவடைப்பை செய்யவில்லை? அப்போது பல்வேறுபட்ட பதவிகளை பெற்று சொகுசு வாழ்க்கை வாழும் போது தெரியவில்லையா? இப்போது தான் இது தேவையா?

யுத்த காலத்தில் இருந்த அனைத்து ஆயுத குழுக்களும் அந்த யுத்த காலத்தில் அரசாங்கத்திடம் நிவாரணம் பெற்று அரசாங்கத்திற்காக செயற்பட்டவர்கள் தானே? இப்போது மட்டும் ஏன் இந்த புதியநிலை?

இந்த கதவடைப்பை செய்து மக்களின் ஆதரவை காட்டி வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் அரசிடம் பேரம் பேசி பணத்தினை பெற்றுக் கொள்வதற்கு தானே இந்த கதவடைப்பு?

ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள்? சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கபோவதாக சூளுரைத்தவர், எங்கே எப்போது உண்ணாவிரதம் இருக்க போகிறீர்கள்?

எந்த ஆயுதக் குழுவுடனும் சேர்ந்து அறிக்கை விடமாட்டேன் என்று உரைத்த விக்கினேஸ்வரன் ஐயா. இப்போது யாருடன் கூட்டு சேர்ந்துள்ளீர்கள் சம்பந்தன் ஐயா, நீங்கள் ஏன் இந்த மௌனம்?

இந்த அரசியல்வாதிகள் தமது சம்பளத்தில் எங்காவது மக்களுக்கோ அல்லது பொது தேவைக்காகவோ உதவிகள் செய்துள்ளீர்களா? இதுவரை காலமும் பாராளுமன்றத்தில் கிடைத்த வாகன அனுமதி பத்திரம் அனைத்தையும் விற்று சொகுசு வாழ்க்கை தான் வாழ்ந்துள்ளீர்கள்.

யாருக்காவது உதவி செய்துள்ளீர்களா? மக்களே! அனைவரும் இனியாவது சிந்தித்து செயல்படுங்கள். இப்படியான அரசியல் நோக்கங்களிற்காக நடைபெறும் எந்த செயலுக்கும் ஆதரவு வழங்காதீர்கள் என குறித்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் துண்டுப்பிரசுரத்தின் இறுதியில் ஊழியர் நலன்புரி சங்கத்தினர் என உரிமை கோரப்பட்டுள்ளதுடன் வவுனியா மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு இன்று மாலை இவ் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.