“என் சாவுக்கு மாமனார், மாமியார்தான் காரணம்”… வாடஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு விபரீத முடிவெடுத்த கர்ப்பிணிப் பெண்!!

628

விருதுநகரில்..

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மாமனார், மாமியார் கொடுமையால் கர்ப்பிணி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நான்கு மாத கர்ப்பிணி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம்.

நம்மிடம் பேசியவர்கள், “சாத்தூரை அடுத்த மல்லைநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரின் மனைவி சோலையம்மாள். இந்தத் தம்பதியின் மகன் உத்தண்டுகாளை (வயது 35), கூலி வேலை செய்து வருகிறார்.

இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், இரண்டாவதாக சாத்தூர் தாலுகா முதலிப்பட்டியைச் சேர்ந்த வர்ஷினி (22) என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்திருக்கிறார்.

உத்தண்டுகாளை-வர்ஷினி தம்பதிக்கு அபிநயா என்ற 11-மாத பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், வர்ஷினி இரண்டாம் முறையாக கர்ப்பமடைந்திருக்கிறார்.

நான்கு மாத கர்ப்பிணியான வர்ஷினியை மாமனார் கருப்பசாமி, மாமியார் சோலையம்மாள் இருவரும் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் வர்ஷினி மிகுந்த மன வருத்தத்துடன் இருந்துவந்திருக்கிறார்.

இந்த நிலையில், இன்று வீட்டில் தனியாக இருந்த வர்ஷினி தனது செல்போனில், “என்னுடைய மரணத்துக்கு மாமனார், மாமியார்தான் காரணம்” என ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், வேலையில் கிடைத்த சிறிய இடைவேளை நேரத்தில் உத்தண்டுகாளை எதார்த்தமாக வர்ஷினியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸைப் பார்த்திருக்கிறார்.

மனைவியின் தற்கொலை குறித்தான ஸ்டேட்டஸ் பார்த்து அதிர்ந்துபோன அவர், வீட்டுக்கு விரைந்து வந்து கதவைத்தட்டி திறக்க முயன்றிருக்கிறார். வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் பதற்றமடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார்.

அப்போது வர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்த தகவல் அப்பையநாயக்கன்பட்டி காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று, வர்ஷினியின் உடலை மீட்டு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம்.

இது குறித்து வழக்கு பதிவுசெய்து, உத்தண்டுகாளை, கருப்பசாமி, சோலையம்மாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். திருமணமாகி இரண்டாண்டுகளே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது” என்றனர்.