தன் வாழ்க்கை வரலாற்றை பாடப் புத்தகத்தில் சேர்க்க நரேந்திர மோடி எதிர்ப்பு!!

290

Modi

பிரதமர் நரேந்திர மோடி, மாநில அரசு பள்ளிப் பாடப் புத்தகத்தில் தன் வாழ்க்கை வரலாற்றைச் சேர்ப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், பள்ளிப் பாடப் புத்தகத்தில் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு குறித்த பாடத்தைச் சேர்க்க அம்மாநில அரசுகள் முடிவு செய்தன.

இதனையடுத்து வரும் கல்வி ஆண்டில் நரேந்திர மோடி வாழ்க்கைக் குறிப்புகள், வரலாறு பாடத் திட்டத்தில் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து குஜராத் மாநில கல்வி அமைச்சர் புபேந்திர சிங் சுதாசமா கூறும்போது, மோடியின் பிறப்பு, அவரது குடும்பப் பின்னணி, அவரது பள்ளி நாட்கள், வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் அவர் எதிர்கொண்ட போராட்டங்கள் முதல் பிரதமர் ஆக உயர்வடைந்தது வரை அந்தப் பாடப் புத்தகத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் நரேந்திர மோடியின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகளில் எதை எதை பாடத்திட்டத்தில் சேர்ப்பது என்பதைத் தீர்மானிக்கத் தனிக்குழு அமைக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் தனது வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடப் புத்தகத்தில் சேர்ப்பது என்ற இரு மாநில முடிவுகளையும் பிரதமர் நரேந்திர மோடி எதிர்த்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டர் மூலம் வெளியிட்ட செய்தியில், சில மாநில அரசுகள், எனது வாழ்க்கைப் போராட்டத்தை பள்ளிப் பாடத்தில் சேர்ப்பது என முடிவு எடுத்துள்ளதாக செய்திகளைப் படித்தேன். வாழும் தனி நபர்களின் வாழ்க்கை வரலாறு, பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கக் கூடாது என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

மேலும் இந்தியாவின் மகத்தான வரலாற்றில் எத்தனையோ வல்லவர்கள் நிறைந்திருக்கின்றனர் என்றும், அந்த மாபெரும் மனிதர்களின் வாழ்க்கையைதான் இளம் சிறார்கள் படிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.