நண்பனின் மனைவியை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய இளைஞன்.. கடனை திரும்ப கேட்டதால் நடந்த விபரீதம்!!

530

கேரளாவில்..

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பாலக்கடவு பகுதியில் சனல்- ஆதிரா (27) தம்பதி வசித்து வந்தனர். சனலின் நண்பர் அகில் (31) மற்றும் ஆதிரா இருவரும் அங்கமாலியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்தனர்.

அகிலுக்கு பொருளாதார நெருக்கடி வரும் போதெல்லாம் ஆதிரா பணம் மற்றும் நகை கொடுத்து உதவி வந்தார். இந்தநிலையில் வழக்கம்போல் பெரும் தொகை கொடுத்ததாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக திரும்ப வழங்காததால் ஆதிரா, தான் கொடுத்த பணத்தை அகிலிடம் திருப்பி கேட்டு உள்ளார்.

இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும் பணம் கொடுக்காமல் வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 29ஆம் தேதி முதல் வேலைக்கு சென்ற ஆதிராவை காணவில்லை என்பதால், அவரை கணவர் மற்றும் உறவினர்கள் தேடினார்கள்.

ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மனைவி ஆதிராவை கண்டுபிடித்து தரக்கோரி சனல் அங்கமாலி போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், ஆதிராவின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது ஆதிரா கடைசியாக அகிலுடன் பேசியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டனர். அப்போது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் 29ம் தேதி ஆதிராவை, அகில் காரில் அழைத்து சென்றதாக தெரிவித்தார்கள்.

தொடர்ந்து போலீசார் அகிலை தேடி வந்த நிலையில் நேற்று காலை அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அகில் கூறியதாவது, ஆதிராவை நான் தான் கடத்திச் சென்று அதிரப்பள்ளி அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் வைத்து கழுத்தை நெரித்து கொன்றேன். அவரின் உடலை துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் வீசிவிட்டேன், என தெரிவித்தார்.

மேலும் ஆதிரா தன்னிடம் கடனாக தந்த நகை மற்றும் பணத்தை திருப்பிக் கேட்டதால் அவரை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அதிரப்பள்ளி ஆற்றுக்கு சென்று ஆற்றின் கரையில் கிடந்த ஆதிராவின் கால் மற்றும் உடல் பாகங்களை கைப்பற்றினர்.

எனினும் சில பாகங்களை தேடி வருகிறார்கள். கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டதால் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.