கடன் வாங்கி விட்டு காணாமல்போன காதல் கணவர்… மன உளைச்சலில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

577

சென்னையில்..

கோவிலம்பாக்கத்தில் காதல் கணவர் வாங்கிய கடனை கேட்டு வந்த தொல்லையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்து கோவிலம்பாக்கம் ஓம் சக்தி நகரை சேர்ந்த கோபியும், சிந்துஜாவும் காதலித்து பெற்றோர் சம்மத்துடன் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர்.

கோபி ஆடிட்டராக பணிபுரிந்து வருவதாகவும், இதற்கு முன்பு பலரிடம் கடன் பெற்று அரிசி மண்டி, டூவீலர் ஷோரூம், எண்ணை கடை , ஏலச்சீட்டு போன்ற தொழில்களில் ஈடுபட்டு அதில் அதிகளவு நஷ்டம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபிக்கு கடன் தொல்லை அதிகரித்து குடும்பத்தில் நிம்மதியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேடவாக்கம் வடக்குப்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் கோபி கடந்த 13ம் தேதி தனது மனைவி சிந்துஜாவை அழைத்துக் கொண்டு கோவிலம்பக்கத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் விட்டுவிட்டு ஆந்திரா செல்வதாக கூறி சென்றுள்ளார்.

தன்னிடம் கடன் பெற்றவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருப்பதாக கூறி சென்ற கோபி கடந்த 24ம் தேதி மனைவிக்கு போன் செய்துள்ளார். அதன் பின்னர் கோபியை தொடர்பு கொள்ள முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோபிக்கு கடன் கொடுத்தவர்கள் சிந்துஜாவை தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுக்கவே மனஉளைச்சலுக்கு ஆளான சிந்துஜா தனது மாமனார் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று சிந்துஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கோபியைத் தேடி வருகின்றனர்.