இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள டெங்கு – 25 பேர் மரணம் – வைத்தியர்கள் கடும் எச்சரிக்கை

409

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள டெங்கு…

இந்த வருடத்தில் சுமார் 300,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகலாம் என மருத்துவ திணைக்களம் எச்சரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

ஒரு நோயாளி கண்டறியப்பட்டால், சமூகத்தில் மேலும் 10 நோயாளிகள் இருப்பதாக அனுமானித்துக் கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரை 30,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியர் விஜேமுனி தெரிவித்தார்.

கொழும்பு நகர எல்லைக்குள் 1337 பேர் காய்ச்சலுடன் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 1138 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்து டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளாரா என்பதை உறுதி செய்யுமாறு மருத்துவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக குழந்தைகள் மத்தியில் இந்நோய் பரவும் தன்மை காணப்படுவதால் பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்துமாறு பெற்றோர்களிடம் விசேட கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் நிலவும் மூன்றாவது டெங்கு திரிபின் தீவிரத்தை தாங்கும் நோய் எதிர்ப்பு சக்தி மனித உடலில் இல்லை என்பதால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்நோய்க்கு பலியாவதைத் தடுக்க முடியாது எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.