
7வது ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி 2-வது முறையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
கடந்த ஏப்ரல் 16ம் திகதி ஆரம்பமான 7வது ஐ.பி.எல். போட்டியின் இறுதிப் போட்டியில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.
பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தலைவர் கம்பீர் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஷேவாக் (7), ஜார்ஜ் பெய்லி (1) அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.
பின்னர் அதிரடியாக ஆடிய மனன்வோரா 67 ஓட்டங்களுடனும், மேக்ஸ்வெல் ஓட்டங்கள் எதுவுமின்றியும் வெளியேற, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களை எடுத்தது.
விருத்திமான் சஹா 115 ஓட்டங்களுடனும், டேவிட் மில்லர் ஒரு பந்தில் ஒரு ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர்.
பின்னர் 200 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக மனிஷ்பாண்டே 50 பந்துகளில் 7 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 94 ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதன் மூலம் கொல்கத்தா அணி 2வது முறையாக ஐ.பி.எல். கிண்ணத்தை வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே 2012ம் ஆண்டில் வென்று இருந்தது. முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பஞ்சாப் வெறும் கையுடன் வெளியேறியது.





