வவுனியா இ.போ.ச சாலையினர் பூவரசங்குளம் பொலிஸாருக்கு எதிராக பணிப்புறக்கணிப்பு போராட்டம் – பயணிகள் அவதி!!

1425

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி மற்றும் நடத்துனர்கள் பூவரசங்குளம் பொலிஸாருக்கு எதிராகவும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று (12.05.2023) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்செல்லும் தனியார் பேரூந்து வழித்தட அனுமதிப்பத்திரமின்றி இ.போ.ச வவுனியா சாலை பேரூந்து நேரசூசியில் வவுனியா சாலம்பைக்குளம் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களை ஏற்றிச்செல்வது தொடர்பில்,

பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டும் பூவரசங்குளம் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாவில்லை எனவும் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினை இடமாற்றக்கோரியும்,

இ.போ.ச சாரதி மற்றும் நடத்துனர்கள் மீது தனியார் பேரூந்தினர் தாக்குதல் மேற்கொள்ளப்படுவது தற்போது அதிகரித்து காணப்படுவதுடன் இதற்கு எவ்வித தீர்வுமின்றி நீதிமன்றில் பல வழக்குகள் தீர்வின்றி காணப்படுகின்றது.

எனவே ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுடன் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் போன்ற இரு கோரிக்கைகளையும் முன்வைத்து இ.போ.ச வவுனியா சாலையினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இ.போ.ச வவுனியா சாலையின் பணிப்புறக்கணிப்பு காரணமாக அலுவலக ஊழியர்கள், மாணவர்கள், மக்கள் பேரூந்து இன்றி நீண்ட நேரம் காத்திருந்தமையும் காணக்கூடியதாகவிருந்தமையுடன் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் தனியார் பேரூந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டிருந்தன.