கொடுமைப்படுத்திய கணவன் : முகமூடி அணிந்து மாமியாருக்கு மருமகள் செய்த மோசமான செயல்!!

989

திருவனந்தபுரத்தில்..

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், பாலராமபுரத்தைச் சேர்ந்தவர் வாஸந்தி (63). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் பக்கத்து வீட்டில் பால் வாங்கப் பாத்திரத்துடன் சென்றிருக்கிறார்.

பால் வாங்கிவிட்டு திரும்பிய வாஸந்தி முன், முகமூடி தரித்து வந்த நபர் ஒருவர், இரும்புக் கம்பியால் வாஸந்தியின் தலையை குறிவைத்து அடித்திருக்கிறார். சுதாரித்துக்கொண்ட வாஸந்தி, பால் பாத்திரத்தால் தடுத்திருக்கிறார்.

தடுத்த வேகத்தில் தரையில் சாய்ந்திருக்கிறார் வாஸந்தி. அப்போதும்விடாத முகமூடி அணிந்த நபர், கீழே விழுந்த வாஸந்தியின் காலில் கம்பியால் பலமுறை தாக்கியிருக்கிறார்.

வாஸந்தியின் அலறல் சத்தம்கேட்டு அந்தப் பகுதியினர் ஓடிவந்திருக்கின்றனர். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார். வாஸந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்தத் தாக்குதலில் வாஸந்தியின் கால் எலும்பு முறிந்திருக்கிறது. வாஸந்தி இப்போது திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். வாஸந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சாலைப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வுசெய்தனர்.

அப்போது பெண் ஒருவர் ஆண் வேடமிட்டு, முகமூடி அணிந்துவந்து வாஸந்தியைத் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் வாஸந்தியைத் தாக்கியது, அவரின் இரண்டாவது மகனின் மனைவி என்பது தெரியவந்தது.

இது குறித்துப் பேசிய போலீஸார், “வாஸந்தியின் இரண்டாவது மகன் ரதீஸ்குமாரின் மனைவி சுன்யா (36). ரதீஸ்குமார் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவி சுகன்யாவை அடித்து துன்புறுத்தி வந்திருக்கிறார்.

ரதீஸ்குமார் தன்னைக் கொடுமைப்படுத்துவதற்கு மாமியாரின் தூண்டுதல்தான் காரணம் என நினைத்தார் சுகன்யா. மேலும் தாயின் சொல்கேட்டு தன்னைத் தாக்கும் கணவரின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்திருக்கிறார்.

எனவே மாமியாரை பழிவாங்கத் திட்டமிட்டார். அதன்படி சுகன்யா ஆண் வேடமிட்டு, முகமூடி அணிந்து மாமியாரைத் தாக்கி யிருக்கிறார். அவர்மீது வழக்கு பதிவுசெய்து, கைதுசெய்திருக்கிறோம்” என்றனர்