வவுனியாவில் ஒருதலைக் காதல் விவகாரத்தால் பரிதாபமாக பறிபோன இரு உயிர்கள்!!

3632

வவுனியா, நீலியாமோட்டைப் பகுதியில் 26 வயதுடைய இளம் குடும்ப பெண் இடியன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரான இளைஞன் ஒருவரும் இடியன் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பறையனாலங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (13.05) அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நீலியாமோட்டையைச் சேர்ந்த தர்சினி என்ற பெண்ணை அப் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரான இளைஞன் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார்.

இருப்பினும் அதனை ஏற்றுக் கொள்ளாத தர்சினி கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் வேறு ஒருவரை திருமணம் செய்து யாழ்ப்பாணத்தில் வசித்து வந்துள்ளார்.

ஒரு மாதத்திளற்கு பின்னர் தனது குடும்பத்துடன் வீடு திரும்பிய தர்சினி, தனது தாயின் வீட்டில் இருந்துள்ளதுடன், கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தனியாக ஒரு வீட்டில் தானும், தனது கணவரும், ஒன்றரை வயதுக் குழந்தையும், உறவினரான வயது முதிர்ந்த பெண் ஒருவரும் வசித்து வந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது, இரு தினங்களுக்கு முன்னர் சந்தேகநபரான இளைஞன் குறித்த வீட்டிற்கு சென்று அச்சுறுத்தல் விடுத்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ தினத்தன்று தர்சினியின் கணவன் குளத்தில் மீன் பிடிக்க சென்றிருந்த நிலையில் அவர் தனது பிள்ளையுடன் உறங்கியுள்ளார். அப்போது சந்தேக நபரான இளைஞன் வீட்டில் நுழைந்து இடியன் துப்பக்கியால் தர்சினியின் தலைப் பகுதியில் சுட்டு விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதிகாலை ஒரு மணியளவில் கணவன் வீட்டிற்கு வந்த போது மனைவியும், மனைவிக்கு அருகில் பிள்ளையும் இரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு 119 பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த பறையனாலங்குளம் பொலிசார், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சந்தேகநபரான இளைஞனை தேடியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று (13.05) காலை அப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் முன்னால் குறித்த இளைஞன் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடப்பதை அவதானித்த ஊர் மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இருவரது சடலங்களையும் மீட்ட பொலிசார், சடலங்களை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன், இளைஞனின் சடலத்தின் அருகில் இருந்து இடியன் துப்பாக்கியையும் மீட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் நீலியாமோட்டையைச் சேர்ந்த ஒன்றரை வயது பிள்ளை ஒன்றின் தாயாரான நியூட்டன் தர்சினி (வயது 26), சிவபாலன் சுஜாந்தன் (வயது 24) ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தடவியல் பொலிசாரின் உதவியுடன் பறையனாலங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி இரு சடலங்களையும் உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.