தகாத வார்த்தைகளால் திட்டிய கணவர்.. மனைவி எடுத்த விபரீத முடிவு!!

562

திருவள்ளூரில்..

வேறு ஒரு பெண்ணுடன் கணவர் பழகியதால் மனமுடைந்த மனைவி, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், ஒண்டிக்குப்பம், குப்புசாமி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன்.

இவரின் மனைவி உஷா (48). இவர், மணவாளநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்துவருகிறேன். என்னுடைய மகள் பவானி (24).

என் மகளுக்கும், பிரசாந்த் என்பவருக்கும் கடந்த 2.9.2019-ம் தேதி திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், நல்லாத்தூரில் பிரசாந்த் வேலை பார்த்தபோது அவருக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

அது தொடர்பாக கடந்த 14.12.2022-ம் தேதி திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். அப்போது பிரசாந்த், இனிமேல் இது போன்ற தவறு செய்ய மாட்டேன் என்று உறுதியளித்தார்.

அதனால் நான் கொடுத்த புகாரை விசாரித்து பிரசாந்தை வெளியே அனுப்பினர். அதன் பிறகும் கடந்த பிப்ரவரி மாதம், பிரசாந்த் அந்தப் பெண்ணுடன் சேர்ந்துகொண்டு என் மகளை மன உளைச்சலுக்குள்ளாகியதோடு தகாத வார்த்தைகளால் திட்டிவந்தார்.

` நீ இருந்தால் இரு. இல்லையென்றால் நீ செத்து விடு’ என பவானியை பிரசாந்த் மிரட்டியிருக்கிறார். இந்த நிலையில் கடந்த 14.5.2023-ம் தேதி என்னுடைய மகள் தற்கொலை செய்துகொண்டார் என எனக்கு செல்போனில் தகவல் கிடைத்தது.

உடனே என் மகளைப் பார்க்க திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் சென்றேன். அப்போது பவானியின் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் அவர் அதிகாலையில் உயிரிழந்துவிட்டார்.

எனவே, என் மருமகன் பிரசாந்த், அவருடன் பழகிய பெண் ஆகியோர்தான் என் மகளின் மரணத்துக்குக் காரணம். என் மகளின் மரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் மணவாளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி சட்டப்பிரிவு 174 (3)-ன் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார். பவானிக்குத் திருமணமாகி, சில ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்துவருகிறது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “பவானியையும் அவரின் குழந்தையையும் பிரிந்த பிரசாந்த், அந்தப் பெண்ணுடன் பழகிவந்திருக்கிறார். அதை பவானியும், அவரின் குடும்பத்தினரும் கண்டித்திருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் பவானி, பிரசாந்த் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பவானியின் அம்மா உஷா அளித்த புகாரின்பேரில் பிரசாந்த்திடம் விசாரணை நடத்திவருகிறோம். பிரசாந்த்துடன் பழகிவந்த பெண்ணிடமும் விசாரணை நடத்தப்படும். ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கைக்குப் பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

பவானியின் குடும்பத்தினர், திருவள்ளூர் அரசு மருத்துவமனை பிணவறை முன்பு சோகத்துடன் இருந்தனர். அப்போது, பவானியின் குழந்தை பிறந்து ஒன்றரை ஆண்டுகளாகிறது. ஆனால், அந்தக் குழந்தையைக்கூட பிரசாந்த் தூக்கிக் கொஞ்ச மாட்டார் எனக் கண்ணீர்மல்கத் தெரிவித்தனர்.