கொழும்பில் உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் மர்மம் : சிக்கலில் பொலிஸார்!!

794

கொழும்பில்..

கொழும்பில் பொலிஸாரின் கட்டுப்பாட்டிலிருந்த போது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வீடொன்றில் பணியாற்றிய நிலையில் திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 42 வயதான ராஜகுமாரி என்பவர் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று புதுக்கடை நீதிமன்றில் நடைபெற்றது. இதன் போது உயிரிழந்த பெண்ணின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டனர்.

சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் தகவல்கள் பதிவு செய்யப்படும் ஆவணத்தில் சந்தேகநபரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததா என வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பினர்.

குறித்த ஆவணத்தில் சந்தேகநபரான பெண்ணின் பெயர் இருக்கவில்லை என வெலிக்கடை பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடப்பட்டமைக்கான பதிவு இல்லையென்பதனூடாக இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் நுகேகொடை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் முன்னிலையாக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, தனது மனைவியின் உடலில் தாக்குதலுக்குள்ளான காயங்களே காணப்பட்டதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் செல்வதுரை ஜேசுராஜ் தெரிவித்துள்ளார்.

நுகேகொட பொலிஸாரினால் உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு பத்தாயிரம் ரூபா பணம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.