காதலுக்கு எதிர்ப்பு… காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி!!

283


தென்காசியில்..கடந்த மூன்று வருடங்களாகக் காதலித்துவந்த சப்-இன்ஸ்பெக்டர்களின் காதலுக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த இருவரும் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், வடிவம்மாள். அவர் குமரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள பட்டாலியனில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருகிறார்.
அதேபோல், ஆவுடையானூர் வைத்திலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் குத்தாலிங்கம். இவர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருகிறார்.


காவல்துறையில் இருவருமே சப்-இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றிவரும் நிலையில், இருவருக்குமிடையே காதல் மலர்ந்திருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் பழகிவந்த நிலையில், காதலுக்கு எதிர்ப்பு பெற்றோர் வடிவில் வந்திருக்கிறது.

இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருவரின் குடும்பத்தினரும் காதலை ஏற்க மறுத்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்த நிலையில், அதற்குக் குடும்பத்தினர், உறவினர்களிடையே எதிர்ப்பு வலுவாகக் கிளம்பியிருக்கிறது.


இரு தரப்பிலும் எதிர்ப்பு ஏற்பட்டதால் அச்சமடைந்த காதலர்கள், பெற்றோருக்குத் தெரியாமலேயே திருமணம் செய்துகொண்டதுடன், இருவரும் பாதுகாப்பு கோரி தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

காதல் திருமணம் செய்துகொண்ட சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியரை, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி, தென்காசி டி.எஸ்.பி-யான நாகசங்கரிடம் அழைத்துச் சென்று விவரத்தைத் தெரிவித்தார்.

உடனடியாக இரு குடும்பத்தினரையும் வரவழைத்த போலீஸார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இரு குடும்பத்தினரும் எந்தப் பிரச்னையும் செய்ய மாட்டோம் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.