பலாத்காரம் நடப்பதற்கு கழிவறைகள் இல்லாததே காரணம் : அதிர்ச்சித் தகவல்!!

268

Abuse

உத்திரப்பிரதேசத்தின் பதாயூவில் நிகழ்ந்த பாலியல் பலாத்காரத்திற்கு அங்கு கழிப்பறைகள் இல்லாததே காரணம் எனத் தெரியவந்துள்ளது.

பதாயூவின் கட்ரா சஹாதத்கன்ச் கிராமத்தில் கடந்த மே 27ம் திகதி 14 மற்றும் 15 வயதான, இரு சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டனர்.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு அவர்கள் வீட்டில் கழிப்பறைகள் இல்லாததே காரணம் என தற்போது தெரிய வந்துள்ளது.

இது குறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், உத்திரப்பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய இந்த மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் கழிப்பறைகள் கிடையாது.

குறிப்பாக தலித் மக்களின் வீடுகளில் அறவே கிடையாது. இதனால் காலைக்கடன்களை பல பெண்கள் இரவில் கழிக்கவேண்டி உள்ளது.
இதற்காக, அவர்கள் தேடிச் செல்லும் இருட்டு மற்றும் ஒதுக்குப்புறங்கள் அவர்களின் பலிக் களமாகிவிடுகிறது என்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் பொதுக் கழிவறைகள் கட்டி சமூகப்பணி செய்துவரும் சுலப் இன்டர்நேஷனல் அமைப்பு, கட்ரா கிராமத்தில் உள்ள சுமார் 100 வீடுகளில் கழிப்பறைகள் கட்டித்தர முன்வந்துள்ளது.

இது குறித்து அதன் நிறுவனர் பிந்தேஷ்வர் பாதக் கூறுகையில், காலைக்கடன்களுக்கு பெண்கள் திறந்தவெளியை பயன்படுத்த வேண்டியிருப்பது மிகவும் கொடுமையானது.

இதை அரசுகள் தங்கள் கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம். முதலில் கழிப்பறை, பிறகுதான் கோயில் என பிரதமர் மோடி குரல் கொடுத்ததன் முக்கியத்துவத்தை உணர வேண்டும்.

இதற்காக அரசுடன் இணைந்து நாங்கள் முன்மாதிரியாக கட்ரா கிராமத்தின் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறைகள் கட்டித்தர தயாராக இருக்கிறோம் என்றார்.

இந்நிலையில், பிஹாரின் தலைநகரான பாட்னாவில் இருந்து மணமாகி அருகிலுள்ள பிகா பலோத் கிராமத்துக்கு மாமியார் வீடு சென்ற புதுமணப் பெண், அங்கு கழிப்பறை இல்லாததால் தம்மால் வாழ முடியாது எனவும், அதை கட்டினால் திரும்பி வருவதாகவும் கூறி தாய் வீடு வந்து விட்டார்.

மேலும், இந்தச் செய்தியை பார்த்து அங்கு சுலப் இன்டர்நேஷனல் கழிப்பறை கட்டித் தந்தது. அந்தப் பெண்ணுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழாவும் நடந்துள்ளது.