வவுனியாவில் தமது நியமனங்களை வழங்ககோரி செயற்திட்ட உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

1142

இடைநிறுத்தப்பட்ட தமது நியமனங்களை உடனடியாக மீள வழங்குமாறு கோரி வடமாகாண செயற்திட்ட உதவியாளர்கள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (02.06) காலை ஆரம்பமான குறித்த பேரணி மணிக்கூட்டுசந்தியை அடைந்து அங்கிருந்து வவுனியா, புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உப அலுவலகம் வரை சென்றது. அங்கு ஜனாதிபதிக்கு அனுப்பும் வண்ணம் மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், நல்லாட்சி அரசாங்கம் 2019 அன்று எடுத்த அமைச்சரவை முடிவின்படி தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு அமைச்சகம் மூலம் செயற்திட்ட உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கோரி வர்த்தமானி வெளியிடப்பட்டது.

பிற்காலத்தில், ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முறையே இரண்டு நேர்காணல்கள் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றன. பின்னர் 2019 அன்று 6547 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டது.

நியமிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் அனுப்பப்பட்டது. இந்நிலையில் எமது கடமைகளை தொடர்புடைய அலுவலகங்களில் நாம் ஏற்றுக்கொண்டோம்.

இந்தச்சூழலில், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதால், நியமனத்தை இடைநிறுத்திய சுற்றறிக்கை அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் தொலைநகலில் அனுப்பப்பட்டது.

அதற்கமைய நாம் பணியிலிருந்து ஒதுங்கியிருந்தோம். தேர்தல் முடிவடையும் வரை காத்திருந்தோம். அதன் பின்னர் மீண்டும் பணிகளை பொறுப்பேற்க சென்ற போது எம்மை சேவையில் இணைக்க முடியாது என தெரிவித்தனர்.

எங்கள் நியமனங்கள் நிதி அமைச்சினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவே எமக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் மேற்கண்ட நியமனத்தை மீட்டெடுக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட போதிலும், இதுவரை எந்த தகவலும் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கவில்லை.

நான்கு வருடங்களாக நாங்கள் வேலையில்லாமல் இருக்கிறோம். தற்போதைய ஜனாதிபதியே அப்போது பிரதமராக இருந்தார். தற்போது வேலையில்லாமையால் நாமும் எங்கள் குடும்ப உறுப்பினர்களும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம். வாழ்வாதார இழப்பு காரணமாக கடுமையான துயரங்களுக்கு ஆளாகியுள்ளோம்.

எனவே, இந்த அரசு எமக்கு நியமனம் வழங்குவீர்களா, இல்லையா என்பதையாவது உறுதியாக கூறும்படி கேட்டு நிற்கின்றோம். எமக்கு நீதி கிடைக்காது விடின் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

குறித்த பேரணியில் நியமனம் இடைநிறுத்தப்பட்ட வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநெச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மாகாணத்தை சேர்ந்த செயற்திட்ட உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.