இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி செலுத்த வேண்டுமா? வெளியான அறிவிப்பு!!

1160

இலங்கையில்..

இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருமானவரி திணைக்களத்தில் வரிக் கணக்கினை திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது அவர்களுக்கு வரி அறவிடப்படும் என்பதல்ல.

வருமான வரிக் கணக்கின் கீழ் நலன்புரிப் பலன்களை விநியோகிக்கவே 18 வயதிற்கு மேற்பட்ட தனிநபர்களின் பதிவு அவசியம். எனவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் உள்ளூர் வருமானவரி திணைக்களத்தில் வரிக் கணக்கினை திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வரிக் கணக்கின் விவரங்களின் அடிப்படையில் தனிநபர்களுக்கான சலுகைகள் குறித்து அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கட்டடக் கலைஞர்கள், கணக்காளர்கள் உள்ளிட்ட 14 வகைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் நேற்று முன் தினம் (01.06.2023) முதல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்தார்.

மேலும், 2023 டிசம்பர் 31ஆம் திகதி 18 வயதை நிறைவு செய்தவர்கள் அல்லது 2024 ஜனவரி 1ஆம் திகதி அல்லது அதற்குப் பிறகு 18 வயதை அடையும் அனைத்து நபர்களும் இந்த புதிய விதிக்கு உட்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்றைய தினம் நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருமானவரி திணைக்களத்தில் வரிக் கணக்கினை திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனினும் இதனால் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என கருதக்கூடாது. வரி செலுத்தும் வரம்புக்குள் இருப்பவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும். வரிக் கணக்கினை திறப்பது என்பது வரி செலுத்துவதை கட்டாயப்படுத்தாது என சுட்டிக்காட்டியுள்ளார்.