ஒடிசா புகையிரத விபத்து… தாயாரை தேடி அலைந்த மகனுக்கு கிடைத்த அந்த ஒற்றை புகைப்படம்!!

869

ஒடிசாவில்..

இந்தியாவின் ஒடிசா மாகாணத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 288 பேர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த கோர விபத்து தொடர்பில் பலர் தங்கள் அனுபவங்களை தற்போது பகிர்ந்து வருகின்றனர்.

சூர்யவீர் என்ற இளைஞர் தெரிவிக்கையில், தொடர்புடைய ரயில் ஒன்றில், தமது தாயாரும் பாட்டியும் மருந்து வாங்கும்படி டவுனுக்கு சென்றதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரயில் விபத்து தொடர்பான தகவல் வெளியாக, சில மணி நேர தேடுதலுக்கு பின்னர் பாட்டியை கண்டுபிடித்ததாகவும், ஆனால் தாயாரை கண்டுபிடிக்க முடியாமல் தவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

நண்பர்களுடன் இணைந்து சம்பவம் நடந்த பகுதியில் மொத்தமாக தேடியதாகவும், ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போனது என சூர்யவீர் தெரிவித்துள்ளார். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் தவித்துப்போன நொடியில், தமது தாயாரின் புகைப்படம் ஒன்றை அனைத்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் அனுப்பி வைத்து தேடச் சொன்னதாக சூர்யவீர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி தாயாரின் அலைபேசி இலக்கமும், அவர் உடுத்தியிருந்த உடையின் வண்ணம் உள்ளிட்ட தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார். ஆனால் இன்று பகல் அந்த தகவல் தமக்கு கிடைத்துள்ளதாகவும், நண்பர் ஒருவர் அனுப்பிய புகைப்படம் ஒன்றில், தமது தாயாரின் சடலமும் காணப்பட்டதாக இளைஞர் சூர்யவீர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது சடலத்தை மீட்டு, பத்திரமாக வீட்டுக்கு எடுத்துச் சென்று உரிய முறைப்படி நல்லடக்கம் செய்ய வேண்டும். ஆனால் விபத்து நடந்த பகுதியில் பெரும் கூச்சல் குழப்பமாக உள்ளது.

தற்போதைய சூழலில் அந்த வழியாக அனைத்து ரயில் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் சாலைகளும் ஜனங்களாலும் மீட்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்டவைகளாலும் நிரம்பியுள்ளது. தாயாரின் சடலத்தை எப்போது இனி மீட்க முடியும் என்பது தெரியவில்லை என நொறுங்கிப்போய் தெரிவித்துள்ளார் அந்த இளைஞர்.