வைத்தியர் மர்ம மரணம் – விசாரணையில் வெளியான தகவல்!!

1086

தம்புத்தேகமவில்..

தம்புத்தேகம வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் உத்தியோகபூர்வ இல்லத்தில் படுக்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அமில சந்தகெலும் திஸாநாயக்க என்ற இந்த மருத்துவரின் மரணத்திற்கு காரணமானதாக சந்தேகிக்கப்படும் இன்சுலின் ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர் தற்கொலை செய்துக் கொள்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எரிந்த ஊசிகளை தம்புத்தேகம பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

ஊசிகள் பாதி எரிந்த நிலையில் வீட்டின் பின்னால் காணப்பட்டதாகவும், அவை நீதிமன்ற உத்தரவுப்படி அரசு ஆய்வாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தம்புத்தேகம வைத்தியசாலையில் கடமையாற்றும் இந்த வைத்தியர், தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், கடந்த ஜனவரி 13ஆம் திகதி முதல் இருவருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறவில்லை எனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மருத்துவரின் மரணம் குறித்து மனைவிக்கு தெரிவித்ததையடுத்து அவரும் மருத்துவரின் சகோதரரும் வந்து சடலத்தை அடையாளம் கண்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் வைத்தியரின் சடலம் அவரது மனைவி மல்காந்தி மெனிகே திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்கொலை செய்து கொண்ட இந்த வைத்தியர் 3 நாட்களாக பணிக்கு வராத காரணத்தினால் வைத்தியசாலை ஊழியர்கள் மேற்கொண்ட விசாரணையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.