புதுச்சேரியில்..

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்மன் கோவில் தெருவில் அண்ணாமலை சாமியின் மனைவி மேரி டெய்சி (72) தம்பதி வசித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையான இவரது கணவர், முதல் மகன் உயிரிழந்து விட்டனர். இவர்களின் 2வது மகன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

எனவே மூதாட்டி மேரி டெய்சி வீட்டில் தனியாக தான் வசித்து வருகிறார். வீட்டின் முதல் தளத்தை வாடகைக்கு கொடுத்து விட்டு, 2வது தளத்தில் அவர் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி வீட்டில் வெட்டுக்காயங்களுடன் மேரி டெய்சி உயிருக்கு போராடிய நிலைலயில் கிடந்தார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் மூதாட்டி மேரி டெய்சியின் மருமகள் ரபெக்கா ரோஸ்லின் நிஷா (36) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் வசித்து வரும் ரபெக்கா ரோஸ்லின் நிஷாவைப் பிடித்து விசாரித்த போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. அவர் தான் தனது மாமியாரை கூலிப்படையை ஏவி கொல்ல முயன்றது அம்பலமானது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கூலிப்படையினராக செயல்பட்ட நெல்லையைச் சேர்ந்த ராஜேஷ் (27), சிம்சன் (19), முத்து (18) மற்றும் 14 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தொடர் விசாரணையில், மூதாட்டி மேரி டெய்சியின் உயிரிழந்த மூத்த மகன் அந்தோணி சேவியரை 2வது திருமணம் செய்தவர் ரபெக்கா ரோஸ்லின் நிஷா. அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், சொத்தை பிரித்து தரும்படி மாமியாரிடம் கேட்டுள்ளார்.

அவர் பிரித்து தரவில்லை. மற்றொருவரை திருமணம் செய்யும் முயற்சியையும் மாமியார் தடுத்து விட்டதாக கூறி அவரைக் கொலைச் செய்ய திட்டம் போட்டதாக ரபெக்கா ரோஸ்லின் நிஷா வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்காக கூலிபடைக்கு ரூ.15 லட்சம் தருவதாக கூறி அவர்கள் மூலம் மேரி டெய்சியை கொலைச் செய்ய முயற்சி செய்தனர்.

எனது மாமியாருக்கு பலரிடம் பணம் கொடுக்கல்- வாங்கல் தகராறு இருப்பதால், கொலை செய்தாலும், என் மீது சந்தேகம் வராது என்று நினைத்ததாகவும் ரபெக்கா ரோஸ்லின் நிஷா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சொத்து தகராறில் மாமியாரை மருகளே தீர்த்துக் கட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





