திருமணமான 15வது நாள் பரிதாபமாக உயிரிழந்த புதுமாப்பிள்ளை.. உடலைப் பார்த்து கதறிய மனைவி!!

941

கடலூரில்..

கடலூர் சேடபாளையம் கெங்கநாயக்கன்குப்பத்தில் வசித்து வருபவர் 25 வயது விமல்ராஜ். இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் பைபர் கேபிள் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் சிதம்பரம் அண்ணாமலை நகரில் வசித்து வரும் ரவீனாவை ஜூன் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் வைத்தீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது. நேற்று தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பணிக்கு செல்ல வேண்டாம் வீட்டில் இருக்க சொல்லி உறவினர்கள் கூறினர். ஆனால் பணிக்கு சென்று சீக்கிரம் திரும்புகிறேன் எனக் கூறி வேலைக்கு புறப்பட்டு சென்றார்.

பின்னர் அவர், திருப்பாதிரிப்புலியூர் தண்டபாணி செட்டிதெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் ஏறி, செல்போன் இணையதள சேவைக்கான கேபிளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது மேலே சென்ற மின்கம்பியில் அவரது கை உரசிவிட்டது. இதில், மின்சாரம் தாக்கி விமல்ராஜ் மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்குடியிருப்பு வாசிகள் உடனடியாக விமல்ராஜை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே விமல்ராஜ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். திருமணமான 15 நாளில் புது மாப்பிள்ளை இறந்தது உறவினர்களிடையே கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

தாலி பிரித்து கோர்ப்பதற்காக காத்திருந்த அவரது மனைவி கணவனின் உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருந்தவர்கள் அனைவரின் நெஞ்சையும் கரைய வைத்தது. இச்சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் விமல்ராஜ் உயிரிழந்தது குறித்து அறிந்த அவருடைய உறவினர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் இணைந்து காவல்நிலையத்தின் முன் திரண்டனர்

பணியின் போது விபத்தில் இறந்த விமல்ராஜ் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அதே நிறுவனத்தில் வேலை வழங்கிட வேண்டும். உடனடியாக இது குறித்து கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும்.

இல்லையெனில் விமல்ராஜ் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறினர். காவல்துறையினர் முற்றுகையிட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

உறவினர்களின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி வழங்கினர். இதனை ஏற்றுக்கொண்ட விமல்ராஜின் உறவினர்கள் முற்றுகை முயற்சியை கைவிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.