சேலத்தில்..

சேலத்தில், அரசு பேருந்து மோதியதில், மூளை சிதறி சம்பவ இடத்திலேயே 7ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த நிலையில், அரசு பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம், கன்னங்குறிச்சி ஆறுமுகம் அய்யர் தெருவைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி நடராஜ். இவரது மகன் கவேஷ். அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கவேஷ் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை பள்ளி விட்டு வீடு திரும்பிய கவேஷ், சிறிது நேரம் கழித்து தனது தாயாரிடம், ஜாமெண்ட்ரி பாக்ஸைப் பள்ளியிலேயே வைத்து விட்டு வந்து விட்டேன்… அதைப் போய் எடுத்து வந்து விடுகிறேன் என கூறி பள்ளிக்கு சென்றிருக்கிறார்.

பள்ளி வகுப்பறைக்கு சென்று ஜாமெண்ட்ரி பாக்ஸை எடுத்துக் கொண்டு, வீட்டிற்கு திரும்பி வருகையில், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கன்னங்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, அரசு மருத்துவமனை அருகே சென்ற போது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவன் கவேஷ் மீது மோதியது. இதில் மூளை சிதறி மாணவன் கவேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை கமிஷனர் லாவண்யா, கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்தில் இறந்த மாணவன் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அரசு பேருந்து மோதி பள்ளி மாணவன் இறந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாணவர்கள், பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில் இருந்த மாணவனின் பெற்றோரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் விபத்து எப்படி ஏற்பட்டது என கேட்டு அறிந்தார். பேருந்தின் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.





