கம்பளையில்..

கம்பளை மற்றும் நாவலப்பிட்டி பிரதேசத்தில் இரண்டு மாத கால இடைவெளியில் ஒன்பது வீடுகளை உடைத்து தங்க ஆபரணங்கள், பணம், கையடக்க தொலைபேசிகள் உட்பட 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடிய இளம் ஜோடியை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் 25 வயது நபரும் அவரின் 20 வயது மனைவியுமே முச்சக்கர வண்டி ஒன்றினை பயன்படுத்தி மேற்படி கொள்ளையில் ஈடுபட்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பளை, ஹெட்காலை நாவலப்பிட்டி, தௌலஸ்பாகை, அபுகஸ்தலாவ, ஹல்கொல்ல, அஸ்வன்ன, வரக்காவ, பத்துனுபிட்டிய மற்றும் ரபுக்பிட்டிய பிரதேசங்களிலேயே மேற்படி வீடுடைப்பு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

நாவலப்பிட்டி தௌலஸ்பாகை வீதியில் வசிக்கும் சந்தேகநபர் பகல் வேளைகளில் வீடுகளுக்கு சென்று கூலி வேலை செய்வதுடன் அந்த வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரங்களில் திருடுவதனை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விதம் பெண் வைத்தியர் ஒருவரின் வீட்டில் பகல் வேலை செய்துவிட்டு இரவு அங்கு சென்று திருடிகொண்டு வெளியேறிய சந்தர்ப்பத்தில் உறக்கத்திலிருந்த வைத்தியரின் 12 வயது மகனின் கையில் திருடனின் கால் மிதிபட்டதால் சிறுவன் பயத்தில் சத்தமிட்டுள்ள சந்தர்ப்பத்தில் வைத்தியர் விழித்துகொண்டதையடுத்து திருடனை அடையாளம் கண்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்து மேற்கொண்ட விசாரணைகளையடுத்து கொள்ளையிடப்பட்ட தங்கச் சங்கிலிகள் ஐந்து உட்பட மோதிரங்கள், கை சங்கிலி பென்டன்கள், பஞ்சாயுதங்கள் அடங்கலாக ஒரு தொகை தங்க ஆபரணங்களை சந்தேக நபர்களின் வீட்டை சுற்றிலும் புதைத்து வைத்திருந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

நேற்று (17) மாலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நாவலப்பிட்டி நீதி மன்ற நீதவான் முன் நிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.





