தெலங்கானாவில்..

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியில் கணேஷ் (30) – சவுந்தர்யா (27) தம்பதி வசித்து வந்தனர். கணேஷ் முடிதிருத்தும் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்த தம்பதியின் பிள்ளைகள் நித்யா, நிதர்ஸ் பள்ளியில் படித்து வந்தனர்.

கணேஷ் – சவுந்தர்யாவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், அண்மைக்காலமாக கணேஷ் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். கூடுதல் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சவுந்தர்யா தனது பிள்ளைகளுடன் தமது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில், நேற்று தாயார் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் உச்சி சென்ற சவுந்தர்யா தனது இரு பிள்ளைகளையும் அங்கிருந்து தூக்கி வீசியுள்ளார். அதன் பின்னர் தானும் மாடியில் இருந்து குதித்துள்ளார். இதில் மூன்று பேரும் உடல் சிதறி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனை பார்த்து அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த சென்ற போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சவுந்தர்யா மற்றும் அவரது பிள்ளைகளின் உடல்களை கைப்பற்றினர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வரதட்சணை கொடுமையால் இந்த சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் சவுந்தர்யாவின் கணவர் கணேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





