புடவை..

ஆயிரம் ஆயிரம் மாடர்ன் உடைகள் வந்தாலும் பெண்களுக்கு அழகு என்றாலே அது புடவை தான். பட்டு, காட்டன், பகல்பூரி, நவுவாரி, மங்களகிரி பட்டு என பல ரகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

500 ரூபாய் புடவையோ அல்லது 5 லட்ச ரூபாய் புடவையோ அது கட்டும் விதத்தில் தான் அழகே இருக்கிறது. மிக நேர்த்தியாக அவரது உடல் அமைப்பு, நிறத்துக்கு ஏற்றவாறு கட்டினால் ஜொலி ஜொலிப்பார்கள்.

இது பற்றி விவரிக்கிறார் Saree Drapist, சுதா ராஜேஷ் (புடவை கட்டும் நிபுணர்). தற்போதைய காலகட்டத்தில் கடல் மாதிரியான பிஸினஸாக மாறிக் கொண்டிருக்கிறது Saree Drapist என விளக்குகிறார் சுதா ராஜேஷ். சொந்த ஊர் விருதுநகர் என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை தானாம், 7 ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்திருக்கிறார்.

புடவை கட்டுவதே பெரிய போராட்டமாக இருந்த காலம் போய், தற்போது 10 நிமிடத்தில் ஆயிரக்கணக்கில் வருமானமாக ஈட்டிக் கொண்டிருக்கிறார் சுதா. திருமணம், பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது மற்றவர்கள் கட்டியுள்ள புடவைகளை பார்த்து வியந்திருக்கிறார் சுதா.

நாமும் ஏன் இப்படி அழகாக கட்டக்கூடாது என கேள்வி எழ, தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு முதலில் கட்டிவிடத் தொடங்கியிருக்கிறார். இதையே ஏன் தொழிலாக மாற்றக்கூடாது என்ற சிந்தனையுடன் ஆரம்பித்து இன்று பலருக்கும் சொல்லிக்கொடுத்தும் கொண்டிருக்கிறார்.

அவர் பேசுகையில், இந்த தொழில் பற்றி பலருக்கும் தெரிவதில்லை, கடல் மாதிரி கொட்டிக் கிடக்கிறது, பலவிதமாக புடவை கட்ட ட்ரை பண்ணி நல்லா ரிசல்ட் கொடுத்தது, பயிற்சி எடுக்க வராங்க, பயிற்சி, முயற்சி இருந்தாலே போதும் சம்பாதிக்கலாம்.

எடுத்த உடனே காசு சம்பாதிக்க முடியாது, நேர்த்தியா உங்களுக்குன்னு ஒரு ஸ்டைல் உருவாக்குங்க, நாலு பேருக்கு தெரியணும், அப்பறம் தானா காசு வரும். முதலில் 200 ரூபாயில் தொடங்கி 5000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம், ஆனால் உங்களது முயற்சி மிக முக்கியம்.

அதிலும் குறிப்பா சோசியல் மீடியால ஆக்டிவா இருக்கணும், உங்களோட சொந்த தொழிலா நீங்கள் வருமானத்தை ஈட்டலாம் என பல பெண்களுக்கும் உத்வேகம் அளிக்கிறார் சுதா ராஜேஷ்.





