திருமண நாளில் கணவனும் மனைவியும் ஒன்றாக உயிரிழந்த சோகம்!!

3210

ராணிப்பேட்டையில்..

ராணிப்பேட்டை மாவட்டம் அரும்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் 34 வயது ஈஸ்வரன். இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 29 வயது சங்கீதா.

இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இவர்களுக்கு மூன்றரை வயது மற்றும் ஒரு வயதில் 2 மகன்கள். நேற்று ஜூன்26ம் தேதி ஈஸ்வரன் – சங்கீதா தம்பதிக்கு திருமண நாள் ஆகும்.

காலை மூத்தமகன் கிஷோரை பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஈஸ்வரன், சங்கீதா, இளைய மகன் தஸ்வந்த் மூவரும் மோட்டார் சைக்கிளில் ஆற்காடு அருகே உள்ள புதுபாடி பச்சையம்மன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

இருசக்கர வாகனம் கடப்பந்தாங்கல் அருகே சென்றபோது ஆற்காட்டில் இருந்து செய்யாறு நோக்கி எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் ஈஸ்வரன், சங்கீதா ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த தஸ்வந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தனியார் பேருந்து டிரைவரின் அலட்சியம், கவனக்குறைவு மற்றும் அதிவேகத்தால் தான் இரு உயிர்கள் பலியாகி உள்ளனர்.

இதற்கு ஒரு முடிவு தெரியாமல் உடலை இங்கிருந்து அகற்றக்கூடாது என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருமண நாளன்று கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் சாலை விபத்தில் பலியானது அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.