திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த பார்கவி(23) என்கிற செவிலியர், இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரியில் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகள் பார்கவி (23). பார்கவி செவிலியர் பட்டயப்படிப்பு முடித்து விட்டு மாதர்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, பார்கவியை 2 மணியளவில் பாம்பு ஒன்று கடித்து விட்டது. உடனே பார்கவியின் அலறல் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் பார்கவியை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே பார்கவி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து பார்கவியின் உடல் ஸ்டான்லி மருத்துவமனை சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வாசுதேவன் ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம் பெண் செவிலியர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.