நான்கு மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்!!

583

கடலூரில்..

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கர்ப்பமான மனைவி மீது சந்தேகமடைந்த கணவன், மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



சிதம்பரம் அருகே கீழ் அனுப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான சிலம்பரசனுக்கும், மயிலாடுதுறை மாவட்டம் அரசூர் கிராமத்தைச் சேர்ந்த ரோஜா என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த ரோஜா மீது சிலம்பரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டு நாள்தோறும் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் சிலம்பரசன் வீட்டில் இருந்த பிளேடால் ரோஜாவின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ரோஜா ரத்த வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிராம மக்கள் கிள்ளை போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் விரைந்து சென்ற போலீசார் ரோஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கு குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ரோஜாவை கொலை செய்துவிட்டு தலைமறைவான சிலம்பரசனை தேடி பிடித்த போலீசார் விசாரணை நடத்தியதில், நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ரோஜாவுக்கு திருமணத்தில் சம்மதம் இல்லை என்றும், அடிக்கடி செல்போனில் சிலரிடம் பேசி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

திருமணமான சில மாதங்களிலேயே புதுப்பெண்ணை கணவன் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.