வவுனியாவில் நெருக்கடிக்குள்ளான மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களது உள்ளக் குமுறல்!!

890

vavuniya

வவுனியா மாவட்டத்தில் நேற்றைய தினம் (07.06) இடம்பெற்ற கல்விசார் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் காரணமாக மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வவுனியா தெற்கு கல்வி வலயதிற்குட்பட்ட பாடசாலைகளில் பல்வேறு விதமான நிகழ்வுகள் இடம்பெற்றன. வட இலங்கை சங்கீத சபை ஏற்பாடு செய்த பரீட்சை நிகழ்வு வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியிலும் மற்றும் பொது அறிவு வினாடி வினாபோட்டி, அத்துடன் தேசிய சேமிப்பு வங்கியினால் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்திலும், வவுனியா தெற்கு வலயத்துக்குட்பட்ட தமிழ் சிங்கள பிரிவு பாடசாலைகள் மத்தியில் ஆங்கில தின போட்டிகள் வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரி மற்றும் காமினி மஹா வித்தியாலயம் என்பவற்றில் இடம்பெற்றது
.
மேற்படி நிகழ்வுகள் ஒன்றுக்கொன்று சரியான முறையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா அல்லது அவரவர் விருப்பபடி திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற ஐயப்பாடு பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

கல்வியில் மிக முன்னேற்றம் கண்டு வரும் வவுனியா மாவட்டம் அதற்கு காரணமான வவுனியா வடக்கு தெற்கு வலயங்களின் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகள், செயற்திட்டங்கள் பாரட்டுதலுக்குரியன.

இருந்த போதும் ஒரு சில செயற்பாடுகள் காரணமாக மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அவதிக்குள்ளாகிய நிலை காலம் காலமாக தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டி நிகழ்சிகளை ஏற்பாடு செய்கிறபோது பல்வேறு விடயங்களை கவனிக்க வேண்டிய தேவையை சம்மந்தப்பட தரப்பினர் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம். உதாரணமாக நேற்றைய நிகழ்வுகளை எடுத்துக்கொண்டால் ஒரு மாணவன் அல்லது ஒருமாணவி மேற்குறிப்பிட ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகள், நிகழ்வுகளில் பங்குபற்ற அங்கும் இங்கும் என ஓடி ஓடி பங்குபற்ற வேண்டிய நிலைமை காணப்பட்டது.

அத்துடன் எல்லா வயது பிரிவுக்குட்பட்ட மாணவர்களும் காலை எட்டு மணிமுதல் மாலை ஆறு ஏழு மணிவரை காத்திருந்து நிகழ்வுகளில் பங்குபற்றிய சம்பவம் காலம் காலமாக தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. வலயக்கல்விப் பணிமனை இது தொடர்பாக சரியான நடைமுறைபடுதல்களை எதிர் வரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரது வேண்டுகோளாகும்.

இதனை கல்வித்துறையினர் யாரும் குற்றசாட்டாக எடுத்துகொள்ளவேண்டாம். இன்று ஏற்பட்ட அசௌகரியமான நிலைமை பற்றி பெற்றோர் மாணவர்கள் ஆசிரியர்கள் பெரும் அலைச்சலுக்குள்ளாகினர். ஒன்றுக்கு மேற்பட்ட் போட்டிகள், நிகழ்வுகள் பல இடங்களில் இடம்பெற்றமை காரணமாக பல பெற்றோர் கொதித்து போயிருந்தனர்.

மேற்படி நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் போது மாணவர்களது வயதுப் பிரிவுகளின் அடிப்படையில் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான போட்டிகள் நேர காலத்துடன் நடாத்தி முடித்தால் மாணவர்களும் வினைத்திறனுடன் போட்டி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வசதியாகவிருக்கும். குழந்தை உளவியலின் அடிப்படையில் காலதாமதமேற்படும் நிலையில் குழந்தைகள், சிறுவர்கள் சோர்வு நிலைக்குத் தள்ளபடுவர் என்பது யாவரும் அறிந்ததே.

போட்டி நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யும் போது நேர முகாமைத்துவம் கட்டயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். போட்டிகளுக்கான விதிமுறைகளில் நேரம் ஒரு கணிப்பீட்டுக் கருவியாக கடைப்பிடிக்கபடுகிறதே தவிர, ஒரு நாளுக்கென திட்டமிடப்படும் நிகழ்வுகள் சரியான நேரத்துக்கு ஆரம்பிப்பதும் இல்லை உரிய நேரத்துக்கு முடிவடைவதுமில்லை என்பது நிதர்சனம்.

சராசரியாக ஒரு மனிதனின் வேலை நேரம் எட்டு மணித்தியாலங்கள் ஆகும். எனவே அந்த எட்டு மணித்தியாலங்களுக்குள் அந்தந்த நிகழ்சிகளை நடாத்தி முடிப்பது சாலச் சிறந்தாகும் .

மேற் குறிப்பிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு எதிர்வரும் காலங்களில் சரியான திட்டமிடல் வழிநடத்தல் நுட்பங்களை கையாண்டு வவுனியா வாழ் மாணவர், பெற்றோர், ஆசிரியர்களின் பூரண ஆதரவுடன் போட்டி நிகழ்வுகளை திறம்பட நடாத்தி வவுனியா மாவட்ட கல்வி அபிவிருத்தி மேலும் முன்னேற சம்பந்தப்பட தரப்பினர் வழிகோல வேண்டும் என்பது எல்லோருடைய அவாவாகும்.

யாரையும் குற்றம் குறை காண்பது எமது நோக்கமல்ல. கலாச்சாரம் கல்வியின் மேன்மையால் தான் நல்வழிப்படுத்தப்படும். அத்தகைய சேவையை செய்யும் கல்விச் சமூகத்துக்கு நாம் எப்பொழுதும் ஆதரவாய் இருப்போம். (பெற்றோர்கள்/நலன்விரும்பிகள் )

-பண்டிதர்-