ஓட்டேரியில்..
ஓட்டேரியில் மனைவியை கொலை செய்து விட்டு, ஒன்றரை வருடம் சாமியாராக கோயில் கோயிலாக வலம் வந்த கணவன், பிச்சை எடுத்த பணத்தை மகன்களுக்கு அனுப்பியதால் சிக்கினார். சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரம் 4வது தெருவில் வசித்து வந்தவர் ரமேஷ் (38).
இவரது மனைவி வாணி (40), மகன்கள் கவுதம் (15), ஹரிஷ் (12). தம்பதியர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி கணவன், மனைவிக்கு சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2021, டிசம்பரில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாணியை அடித்துக் கொலை செய்துவிட்டு வீட்டின் சோபாவுக்கு அடியில் உட்புறமாக துணியில் சுற்றி மூட்டையை அடுக்கி வைப்பது போல, அவரது உடலை மறைத்து வைத்துவிட்டு ரமேஷ் தலைமறைவாகிவிட்டார்.
2 நாட்கள் கழித்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே அக்கம் பக்கத்தினர் ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அப்போதைய ஓட்டேரி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்குச் சென்று அழுகிய நிலையில் வாணியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்து ரமேஷை தேடி வந்தார்.
ஆனால், ரமேஷ் செல்போனை பயன்படுத்தாமல் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை பிடிப்பதில் தொடர்ந்து போலீசாருக்கு சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாறுவேடத்தில் மறைந்திருந்து ரமேஷ் வருவதை கண்காணித்தனர்.
அவர் வந்தபோது சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. ரமேஷிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த அவரது மனைவி வாணி, கொலையாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து ரமேஷை வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறி வந்துள்ளார்.
மேலும் வாணியின் நடத்தையிலும் ரமேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த ரமேஷை வாணி வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறியுள்ளார். அப்போது மது போதையில் இருந்த ரமேஷ், வாணி கட்டியிருந்த சேலையின் முந்தானையால் அவரது கழுத்தை இறுக்கியுள்ளார்.
இதில் வாணி கழுத்து எலும்பு நொறுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ், அவரது உடலை மறைக்க முற்பட்டுள்ளார். அவரது முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது.
இதனால் வாணியின் தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. வேறு வழி இல்லாமல் வாணியின் உடலை மூட்டை கட்டி சோபாவின் அடியில் போட்டுவிட்டு எலி மருந்து வாங்கி அதனை மதுவில் கலந்து குடித்துள்ளார்.
ஏற்கனவே மது குடித்து இருந்ததால் மொத்தத்தையும் வாந்தி எடுத்துவிட்டு கோயம்பேடு பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பேருந்து மூலம் ரமேஷ் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார்.
திருவண்ணாமலை சென்றதும் சில சாமியார்களுடன் தங்கி இருந்துள்ளார். அதன் பிறகு அங்கிருந்த சில சாமியார்கள் வட இந்தியாவிற்கு ஆன்மிகப் பயணம் சென்றுள்ளனர்.
அவர்களுடன் வட இந்தியாவிற்கு சென்ற ரமேஷ், அங்கு பூரி ஜெகந்நாதர் கோயில், ரிஷிகேஷ், காசி உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று, கோயில் கோயிலாகச் சுற்றியுள்ளார்.
சாமியார்கள் எங்கு தங்குகிறார்களோ, அங்கு தங்கி பிச்சை எடுத்து துறவு வாழ்க்கையை ரமேஷ் வாழ்ந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, தான் பிச்சை எடுத்த 1,800 ரூபாய் பணத்தை ஓட்டேரியில் உள்ள தனது நண்பரை தொடர்பு கொண்டு அவரது கூகுள் பே நம்பருக்கு, வேறு ஒரு நபர் மூலம் பணம் அனுப்பி வைத்துள்ளார்.
அந்த பணத்தை தனது மகனிடம் கொடுத்து விடுமாறு ரமேஷ் கூறியுள்ளார். குறிப்பிட்ட அந்த நபரும் பணத்தை அவரது மகனிடம் கொடுத்து விட்டார். அதன் பிறகு ரமேஷ் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை.
அப்போது ரமேஷ், தான் சாமியாராக மாறிவிட்டதாகவும், தற்போது நான் பேசிக் கொண்டிருக்கும் நம்பர் என்னுடன் உள்ள ஒரு சாமியாரின் எண் எனவும் நண்பரிடம் கூறியுள்ளார். மேலும் என்னை யாரும் தேட வேண்டாம் எனவும் கூறியுள்ளார். சில மாதங்கள் கழித்து இந்த தகவல் ஓட்டேரி போலீசாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் ரமேஷின் நண்பரிடம் இருந்து குறிப்பிட்ட அந்த சாமியாரின் செல்போன் நம்பரை வாங்கி கால் லோகேஷன் போட்டு பார்த்தனர். அப்போது அந்த எண் திருவண்ணாமலை, சதுரகிரி, பின்னர் காசி போன்ற கோயில் சார்ந்த மடங்களை காண்பித்தது.
கடைசியாக அந்த எண் டெல்லியில் உள்ள ஒரு ஆசிரமத்தை காண்பித்தது. மேலும் ரமேஷ் சாமியாராக மாறிவிட்ட தகவலையும் தெரிந்து கொண்ட போலீசார், டெல்லியில் உள்ள ஆசிரமங்களில் ரமேஷை தேடினர்.
இதில் டெல்லி அஜ்மேரி கேட் எனும் பகுதியில் உள்ள ஹரிஹர சுதன் ஆசிரமத்தில் ரமேஷ் தங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இந்நிலையில் புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசனின் தனிப்படை போலீசார் ரமேஷை கைது செய்ய டெல்லிக்குச் சென்றனர்.
அப்போது அவர் பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்குச் சென்று இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து உஷாரான ஓட்டேரி போலீசார் கடந்த திங்களன்று பவுர்ணமி முடிந்து எந்தெந்த சாமியார்கள் ஊருக்குக் கிளம்பியுள்ளார்கள் என்ற விவரங்களை சேகரித்தனர்.
இதில் குறிப்பிட்ட சிலர் நேற்று முன்தினம் காலை ரயில் மூலம் வட இந்தியாவிற்குச் செல்ல இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து நேற்று காலை ரமேஷை கையும் களவுமாக பிடித்தனர்.
போலீசாரிடம் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு சிக்கிய ரமேஷிடம் விசாரணை மேற்கொண்டதில் பல தகவல்கள் வெளிவந்தன. அப்போது, அவர், தான் வேண்டுமென்றே வாணியை கொலை செய்யவில்லை எனவும், தொடர்ந்து அவர் என்னை அவமானப்படுத்தி வந்ததால் போதையில் சேலையால் கழுத்தை நெரித்ததில் அவர் உயிரிழந்தார் எனவும் கூறி அழுதுள்ளார்.
ஒன்றரை வருடங்கள் கழித்து தனது தந்தை பிடிபட்டுள்ளதை அறிந்த ரமேஷின் மகன்கள் ஓட்டேரி காவல் நிலையம் வந்தனர். அப்போது ரமேஷ் தனது இரண்டு மகன்களிடமும் என்னை மன்னித்து விடுங்கள் என்றுக் கூறி அழுதுள்ளார்.
இதனையடுத்து கடந்த ஒன்றரை வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த வாணியின் கொலை வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.