ஈரோட்டில்..
ஈரோட்டில் ஆட்டோ ஓட்டும் பெண் டிரைவர் பவானியை நேர்காணலில் சந்தித்த போது அவர் கூறிய தன்னம்பிக்கை வார்த்தைகளையும், வேதனையும் தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
ஈரோட்டில் 13 வருஷமா ஆட்டோ ஓட்டுகிறேன். எங்கள் ஊரில் பெண்கள் யாரும் ஆட்டோ ஓட்டவில்லை. அதனால், எனக்கு ஆட்டோ ஓட்டும் ஆர்வம் வந்தது. அதுமட்டுமல்லாமல், சுயமாய் வேலை செய்ய வேண்டும் என நினைத்து இந்த தொழிலில் இறங்கினேன்.
எவ்வளவோ பிரச்சனைகளை பார்த்திருக்கிறேன், சந்தித்திருக்கிறேன். எல்லோரும் என்னை திரும்பி பார்க்க வேண்டும் என்று ஆட்டோ தொழிலுக்கு வந்தேன். இன்றும் எதிர்ப்புகள் நிறைய இருந்தாலும் அதை Face பண்ணிட்டு தான் இருக்கிறேன். உதவி செய்வதற்கு என யாரும் இல்லை.
எனக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். என் மகன் காதல் திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். என்னை மதிக்காமல் தகாத வார்த்தைகளில் என் மகன் பேசுவான். ஒரு குழந்தை மட்டுமே மருமகளிடம் இருக்கிறது.
மற்றொரு குழந்தையான என் பேத்தியை அடித்து, கையை ஒடித்துவிட்டு என்னிடம் கொடுத்தார்கள். என் மருமகள் வந்துகூட பார்ப்பதில்லை. இதற்காக, கோர்ட்டில் கேஸ் கூட போய் கொண்டிருக்கிறது.
என்னிடம் பணம் கிடையாது. ஆட்டோ ஸ்டாண்டு எனக்கு கிடையாது. ஒரு நாளில் 200 ரூபாய் சம்பாதிப்பதே பெரிய விஷயமாய் இருக்கிறது. எனக்கு பஸ் ஸ்டான்டில் ஏதோ ஒரு இடத்தில் அனுமதி கொடுத்தால் போதும்.
இதனை, நான் தமிழக முதல்வரிடம் உதவியாக கேட்கிறேன். ஆண்கள் தான் பெரிய ஆட்டோக்காரர்கள் மாதிரி எங்களை விடுவதில்லை. அண்மையில், கோயம்புத்தூர் சென்றிருந்தேன். அங்கு, பல பெண்கள் ஆட்டோ ஓட்டுவதை பார்த்து எனக்கும் ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
ஆட்டோ ஓட்டி தான் பேத்தியை பார்த்துக் கொள்கிறேன். தற்போது, பள்ளி குழந்தைகளுக்கு மட்டும் தான் ஆட்டோ ஓட்டுகிறேன். என் பேத்திக்கு என்று ஆட்டோவில் சிறிய இடம் ரெடி பண்ணியிருக்கிறேன்.
காலையில் 4 மணிக்கு எழுந்ததுமே என் பேத்திக்கு உணவு செய்து வைத்துவிடுவேன். என் பேத்தி சிறிய குழந்தையாய் இருக்கும் போதே மடியில் வைத்து தான் ஆட்டோ ஓட்டுவேன்.
குழந்தைக்கும் எனக்கும் ஆதரவு இல்லை. நாங்கள் அனாதையா தான் இருக்கிறோம். இதை தமிழக முதலமைச்சர் பார்த்து உதவி செய்ய வேண்டும். முடியலன்னு எதுமே கிடையாது.
பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என பவானி கூறியது நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஆட்டோ டிரைவர் பவானியில் முழு நேர்காணலை கீழே இணைத்துள்ளேன்.