கோவையில்..
இன்றைய இளம் தலைமுறையினர் மன அழுத்தம் தாங்காமல், தோல்வி பயத்தில் பெற்றோர் ஆசிரியர் திட்டுதல் என எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இவர்களுக்கு முன்னுதாரணமாக அவர்களை அந்த எண்ணத்தில் இருந்து மீட்டெடுக்கும் பணி ஆசிரியர் பணி. பள்ளியின் தலைமை ஆசிரியரே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் விஜயராணி (53). பள்ளிக்கு அருகிலேயே வசித்து வருகிறார்.
இவருக்கு 2 மகள்கள். இருவருக்குமே திருமணமாகி விட்டது. நேற்று ஜூலை8ம் தேதி சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை தினம் என்பதால், அவருடைய இருசக்கர வாகனத்தில் துடியலூர் ரயில் நிலையம் வந்திருந்தார்.
அங்கு அவருடைய வாகனத்தை நிறுத்தி விட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த பயணிகள் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிவிக்கப்பட்ட உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்ட தலைமை ஆசிரியை விஜயராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப பிரச்சனையா அல்லது பணிச்சுமையா? எதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளியின் தலைமை ஆசிரியை திடீரென தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தான் மகள்களுக்கு திருமணமான நிலையில், இரு மகள்களும் தாயாரின் சடலத்தைப் பார்த்து கதறியழுதது சோகத்தை ஏற்படுத்தியது.