ஜப்பானில்..
ஜப்பான் குடிவரவு மையத்தில் 2021 ஆம் ஆண்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது மரணமான இலங்கை பெண்ணின் குடும்பத்தினர், தொழில்முறை அலட்சியத்தால் மரணம் நிகழ்ந்ததாக கூறி ஜப்பான் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதற்கமைய மரணமான இலங்கை பெண்ணின் குடும்பத்தினர் தமது சட்டத்தரணிகளிடம் இது தொடர்பான வலியுறுத்தலை விடுத்துள்ளனர். ரத்நாயக்க லியனகே விஸ்மா சந்தமாலி என்ற பெண்ணே, குடிவரவு சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது 2021ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
ஜப்பானில் உள்ள தடுப்பு முகாமில் முறையான சிகிச்சை இன்றி உயிரிழந்த இலங்கை மாணவி விஷ்மா சந்தமாலி தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் ஜப்பானிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் அறிக்கை ஒன்றை வழங்குமாறு ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சு கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் அவர் விசா நிபந்தனைகளுக்கு முரணாக தங்கியதால் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்டில் குடிவரவு பணியகத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.அங்கு வாந்தி மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட உடல் நலக்குறைவால் அவதியுற்ற அவர் 2021 மார்ச் 6ஆம் திகதி ஜப்பானின் நகோயாவில் உள்ள தடுப்பு மையத்தில் உயிரிழந்தார்.
விஷ்மா சந்தமாலியின் உடல் நிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் இந்த மரணம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினாலும், விஷ்மா சந்தமாலி உடல்நிலை மோசமாகிய நிலையில் உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்திருக்கலாம் என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
அதன்படி, உயிரிழந்த சந்தமாலியின் பாட்டி இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தார்.விஷ்மா சந்தமாலியின் கடைசி சில நாட்களைக் காட்டும் சிசிடிவி காணொளியை அண்மையில் அவரது வழக்கறிஞர்கள் வெளியிட்டனர்.எனினும், இது அங்கீகரிக்கப்படாத காணொளி என்று ஜப்பானிய நீதித்துறை அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.