பேராதனையில்..
பேராதனை போதனா வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்த யுவதியின் மரணத்திற்கு ஒவ்வாமையே காரணம் எனவும், அவருக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 11ஆம் திகதி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொத்தபிட்டிய, அலகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சாமோதி சந்தீபனி மதுசிகா ஜயரத்ன (21 வயது) என்ற யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
எவ்வாறாயினும், ஊசி மூலம் மருந்து ஏற்றியதையடுத்தே அவர் உயிரிழந்ததாக உயிரிழந்த யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியிருந்தனர்.பெற்றோரின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்காக, விசேட வைத்திய குழுவொன்று, நாளை பேராதனை வைத்தியசாலைக்கு செல்ல உள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பேராதனை போதனா வைத்தியசாலையில் Bupivacaine என்ற மயக்க மருந்து வழங்கப்பட்ட நிலையில், இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த மருந்தின் ஒரு தொகுதியில் ஒரு பதார்த்தம் குறைவாக இருந்தமையே உயிரிழப்பிற்குக் காரணம் என்பது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதியாகியிருந்த நிலையில் தற்போது அந்த மருந்தின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த காலப்பகுதியில் பேராதனை போதனா வைத்தியசாலை மற்றும் சிறுவர் வைத்தியசாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.