
அவுஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்று கைதாகி திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 4 இளைஞர்கள் தமிழக அரசின் பரிந்துரையின்பேரில் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
தமிழக அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த 100க்கும் மேற்பட்டோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் படகு மூலம் சென்னை பகுதியிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றனர்.
அவர்களை கடலோரக் காவல் படையினர் பிடித்து கியூ பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக கியூ பிரிவு பொலிஸார் கடவுச்சீட்டு தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அனைவரையும் கைது செய்து சென்னை செங்கல்பட்டில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்தனர்.
இதில், திருச்சி அகதிகள் முகாமிலிருந்த இலங்கை திரிகோணமலையைச் சேர்ந்த ந.கங்காதரன் (38), கும்மிடிப்பூண்டி முகாமிலிருந்த முல்லைத் தீவைச் சேர்ந்த அ.அருள்ஞானராஜ் (32), சென்னை முகாமிலிருந்த இலங்கை புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு.யோகேஸ்வரன் (55), வேலூர் முகாமிலிருந்த வே.ராஜேஸ்வரன் (46) ஆகியோர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர்.
கைதாகி பல ஆண்டுகளாக சிறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கியூ பிரிவு பொலிஸார் மேல் நடவடிக்கை எடுக்கவில்லையென கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அவர்களை விடுவிக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, கைதானவர்களை நன்னடத்தையின் கீழ் விடுவிக்க கோரி தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைத்தது. அதன்பேரில் அனைவரையும் விடுவிக்க ஆளுநர் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
இதையடுத்து செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்தவர்கள் அன்றைய தினமே விடுவிக்கப்பட்டனர்.
திருச்சியில் மாவட்ட ஆட்சியர் விடுப்பில் இருந்ததால் அன்றைய தினம் அதற்கான நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இந்நிலையில், திங்கள்கிழமை 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
-தினமணி-





