வவுனியா ஊடாக நீண்ட நாட்களின் பின் பயணத்தை மேற்கொண்ட யாழ்தேவி புகையிரதம்!!

1335

கொழும்பு – காங்கேசன்துறை நோக்கிய பயணத்தை மீள ஆரம்பித்த யாழ்தேவி கடுகதி புகையிரத நிலையம் இன்று (15.07) காலை 11 மணிக்கு வவுனியாவை வந்தடைந்தது.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹோ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.



இதன்போது அனுராதபுரம் – ஓமந்தை வரையிலான புனரமைப்பு பணிகள் இரண்டு கட்டமாக செயற்படுத்தப்பட்ட நிலையில், வவுனியா – அனுராதபுரம் வரையிலான 48 கிலோமீற்றர் புகையிரத பாதையும், வவுனியா – ஓமந்தை வரையான 13 கிலோமீற்றர் புகையிரத பாதையும் புனரமைக்கப்பட்டன.

இந்த அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு 91.27 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இந்த அபிவிருத்தி செயற்திட்டம் நிறைவுப் பெற்றதை தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தில் 100 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரத்தை இயக்க முடியும் தெரிவிக்கப்பட்ட நிலையில் பரீட்சார்த்தமாக யாழ்தேவி புகையிரதம் கடந்த 9 ஆம் திகதி பயணித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து பயணிகள் போக்குவரத்து சேவையை மீள ஆரம்பித்துள்ளது. கொழும்பில் இன்று காலை 5.45 இற்கு பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி கடுகதி புகையிரதம் காலை 11 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது.

தனது பயணத்தினை ஆரம்பித்த யாழ்தேவி புகையிரதம் மணிக்கு 80 கிலோமீற்றர் தொடக்கம் 100 கிலோமீற்றர் வேகத்தில் இதன்போது பயணித்திருந்தது.

தண்டவாளப் புனரமைப்பு பணிகளின் பின் மீள புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டதையடுத்து அதிகளவிலான மக்கள் பயணங்களை மேற்கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.