
மானிப்பாய் பகுதியில் சுமார் 52 இலட்சம் பெறுமதியன வலம்புரிச் சங்கினை அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த 3 பேர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.றொகான் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்..
மானிப்பாய் பொலிஸாருக்குக் அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோமான முறையில் வைத்திருக்கும் வலம்புரி சங்கு விற்பனை செய்யப்படுவதாக இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் விசேட அதிரடிப் படையினருக்கு மேற்படித் தகவல் வழங்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் தேடுதல் நடத்திய விசேட அதிரடிப்படையினர் நேற்று காலை மானிப்பாய் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் முன்னால் வைத்து குறித்த வலம்புரிச் சங்கினை வைத்திருந்த நபரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் அங்கு நின்ற மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலம்புரிச் சங்கினையும் மீட்ட விசேட அதிரடிப் படையினர், கைது செய்யப்பட்டவர்களையும், மீட்கப்பட்ட வலம்புரிச் சங்கினையும் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
நவாலிப் பகுதியினைச் சேர்ந்த செல்வராஜா புஸ்பராஜா, மல்லாகம் மல்வப் பகுதியினைச் சேர்ந்த மாணிக்கவாசகர் செந்தில்குமரன், ஆனைக்கோட்டை காக்கைதீவுப் பகுதியினைச் சேர்ந்த வரதலிங்கம் சிவஞானம் ஆகியோரே மேற்படி சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களாவார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, குறித்த வலம்புரிச் சங்கினை 52 இலட்சத்திற்கு ஒருவருக்கு விற்பனை செய்வதற்கு தாம் முற்பட்டதாகவும், வலம்புரிச் சங்கினைப் பெற்றுக் கொள்வதாகக் கூறியவர் மானிப்பாய் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஊடாக பணத்தினை தருவதாகவும் கூறியிருந்தார்.
வங்கியில் சென்று பணத்தினை பெற்றுக் கொண்டு வலம்புரிச் சங்கினை அவரிடம் கையளிக்கவே நாங்கள் நேற்று சம்பவ இடத்திற்குச் சென்றோம் என்று தெரியவந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.





