தடுப்பூசி செலுத்தப்பட்ட நான்கு மாத குழந்தைபலி : பிரேத பரிசோதனையில் வழங்கப்பட்டுள்ள திறந்த தீர்ப்பு!!

708

பண்டுவஸ்நுவரவில்..

தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒரு நாளின் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனத்தால் உயிரிழந்த பண்டுவஸ்நுவரவைச் சேர்ந்த குழந்தையின் பிரேத பரிசோதனையில் மரணம் குறித்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



குளியாபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொமுகொமுவ பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.எஸ்.நிம்னாதி திஸாநாயக்க என்ற நான்கு மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

அதன்படி, குழந்தையின் உடற்கூறுகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சுகாதார திணைக்களத்தினால் 4 மாதங்களில் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி கடந்த சனிக்கிழமை ஹெட்டிபொல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் குழந்தைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர், வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு மறுநாள் அதிகாலை ஏற்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக நேற்றுமுன் தினம் காலை உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து, பெற்றோர் உடனடியாக குழந்தையை குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அந்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னர் குழந்தையின் உடலம் பிரேத பரிசோதனைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், சட்ட வைத்திய அதிகாரி அஜித் ஜயசேன இது தொடர்பில் வெளிப்படையான தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து மேலதிக பரிசோதனைக்காக உடற்பாகங்களை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.இதனை தொடர்ந்து குழந்தையின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று இறுதிச் சடங்கு நடைபெற்றுள்ளது.