கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரியில் உடல்நிலை பாதிக்கப்பட்டு தங்கை உயிரிழந்த நிலையில், அண்ணன் மற்றும் அக்காவும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆழ்வார்கோவில் தாந்தவிளை பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் அண்ணன் தங்கைகளான பாபு, உஷா பார்வதி, ஸ்ரீ தேவி.

இவர்களது பெற்றோர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் குடும்ப வருமை காரணமாக மூவரும் திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாவு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் வீட்டை திறந்து பார்த்தபோது மூவரும் உடல் அழுகிய நிலையில் உயிரிழந்தது கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து உடல்களை மீட்ட காவல்துறையினர் உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பாபுவின் தங்கை உஷா பார்வதி கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் சோகம் தாங்க முடியாமல் பாபுவும், ஸ்ரீ தேவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல்களை வாங்க உறவினர்கள் முன்வராததால் மண்டைக்காடு பகவதி அம்மன் சேவா டிரஸ்ட் உதவியுடன் மூவரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது.





