ராமநாதபுரத்தில்..
கணவரின் இறப்பைத் தாங்க முடியாமல், கைக்குழந்தையைப் பரிதவிக்க விட்டுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நேரு நகரைச் சேர்ந்தவர் சுதாகர் (30), இவரின் மனைவி தாரணி காமாட்சி (29). இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை இருக்கிறது.
சுதாகர் எலெக்ட்ரிக் மற்றும் வெல்டிங் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பரமக்குடி பஸ் நிலையம் அருகேயுள்ள ஒரு வீட்டின் மாடியில் ஜன்னலில் கொசுவலை மாட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் சுதாகர்.
வெளிப்புற ஜன்னலில் கொசுவலை மாட்டுவதற்காக பக்கவாட்டு சுவரில் நின்று வேலை பார்த்தபோது, எதிர்பாராதவிதமாக கால் இடறி முதல் மாடியிலிருந்து கீழே விழுந்திருக்கிறார்.
இதில் அவரின் தலையின் பின் பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, அவர் உடனடியாக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சுதாகரை அவரின் உறவினர்கள் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் உயர் சிகிச்சைகள் அளித்தும், பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் சுதாகர். கணவர் இறந்த துக்கம்தாளாமல் கைக்குழந்தையுடன் தாரணி காமாட்சி கதறி அழுதபடி இருந்திருக்கிறார்.
அவரின் உறவினர்கள் எவ்வளவோ ஆறுதல் கூறியும், அழுகையை நிறுத்தவில்லை எனச் சொல்லப்படுகிறது. நேற்றுவரை சாப்பிடாமல் குழந்தையை வைத்துக்கொண்டு கணவரின் படத்துக்கு முன்பு அமர்ந்து அழுதுகொண்டே இருந்திருக்கிறார்.
உறவினர்களும், அந்தப் பகுதியினரும் தொடர்ந்து ஆறுதல் கூறிய நிலையில், அழுகையை அடக்கிக்கொண்டு, “நான் அழமாட்டேன், என்னைத் தனியாக இருக்க விடுங்கள்” எனக் கூறி குழந்தையை உறவினர்களிடம் கொடுத்துவிட்டு, “நான் தூங்கச் செல்கிறேன்” எனக் கூறிவிட்டு, தனி அறைக்குள் சென்று உள்பக்கமாகப் பூட்டியிருக்கிறார்.
சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டி, அவரை வெளியே வருமாறு உறவினர்கள் அழைத்திருக்கின்றனர். ஆனால், நீண்ட நேரமாகியும் கதவைத் திறக்காததால் சந்தேகமடைந்து கதவை உடைத்திருக்கின்றனர்.
அப்போது அவர் மின்விசிறியில் சேலையை மாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயினர். இது குறித்து தகவலறிந்த பரமக்குடி நகர் காவல் நிலைய போலீஸார், தற்கொலை செய்துகொண்ட தாரணி காமாட்சியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கணவரின் இறப்பைத் தாங்க முடியாமல், கைக்குழந்தையைப் பரிதவிக்க விட்டுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.