வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல் : இளம்பெண் பலி : 10 பேர் காயம் : முழுமையான விபரம்!!

8100

இன்று (23.07.2023) அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத சிலர் வீடொன்றுக்குள் நுழைந்து வாளால் வெட்டி, தீ வைத்ததில் 21 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

119 பொலிஸ் அவசர பிரிவு ஊடாக கிடைத்த செய்தியின் அடிப்படையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வவுனியா பொலிஸாரும், வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினரும் மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.

21 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த பத்து பேர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவனை தேடிச் சென்ற குழுவே தாக்குதல் நடத்தியுள்ளது. நள்ளிரவு 12 மணியளவில் இளைய மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, முகத்தை மூடிக்கட்டிக் கொண்டு திடீரென உள்நுழைந்த கும்பல், அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டியதுடன், அனைவர் மீதும் பெற்றோல் ஊற்றியுள்ளனர்.

“எங்கே சுகந்தன்” என தேடியபடியே அந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பவத்தின் போது வீட்டின் மேல்மாடியில் இருந்த சுகந்தன் என்ற குடும்பஸ்தர் கீழே இறங்கி வந்தபோது, அவரை வெட்ட முயன்ற போது கணவனை காப்பாற்ற குறுக்கே சென்ற 21 வயதான மனைவியும் சரமாரியான வெட்டுக்காயங்களிற்கு உள்ளானார்.

பின்னர் அவர்கள் மீது பெற்றோல் ஊற்றி தீ மூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 21 வயதான பாத்திமா என்ற மனைவி உயிரிழந்தார். கணவன் உயிராபத்தான காயங்கள், எரிகாயங்களிற்கு உள்ளானார்.

02 வயதுடைய சிறுவன் மற்றும் 07,08 ,13, ஆகிய வயதுடைய மூன்று சிறுமிகள், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட நான்கு பெண்கள், 42 வயதுடைய ஆண் மற்றும் 36 வயதுடைய ஒருவரும் தீயில் சிக்கி காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த நபர்களுக்கு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளமையுடன் சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து தடவியல் பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டமையுடன் சட்ட வைத்திய அதிகாரி ம.கோகுல்சங்கர் மற்றும் பதில் நீதவான் தயாபரன் ஆரத்தி சம்பவ இடத்திற்கு வருகை தந்து தடயங்களை பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து வீட்டின் வெட்டு மற்றும் எரிகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.