காதல் தகராறில் இளைஞன் வெட்டிக் கொலை : போலீசார் தீவிர விசாரணை!!

949

தமிழ்நாடு..

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் காதலினால் ஏற்பட்ட கொலை என்பதால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க திசையன்விளை பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே அப்புவிளை ஊராட்சியில் காதல் விவகாரத்தில் இளைஞர் கொலையில் மோப்ப நாயுடன் துப்பு துலக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அப்புவிளை சுவாமிதாஸ் நகரை சேர்ந்த 19 வயது இளைஞர் முத்தையா சங்கனான் குளத்தில் திருமண அழைப்பிதழ் தயார் செய்யும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

அவர் கம்பெனியில் தன்னுடன் பணிபுரிந்து வரும் நெல்லை மாவட்டம் இட்ட மொழி ஊரைச் சேர்ந்த சுதா என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் சுதாவின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

எதிர்ப்பையும் மீறி நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளன்று மதியம் 2:30 மணிக்கு அப்புவிளை சாமிதாஸ் நகரில் உள்ள முத்தையாவின் வீட்டிற்கு சென்று முத்தையாவை நேரில் சந்தித்துள்ளார் சுதா.

பின்னர் நான்கு முப்பது மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் சுதாவை இட்ட மொழியில் கொண்டு விட்டு விட்டு திசையன்விளை வந்துள்ளார். பின்னர் இரவு 8 மணி அளவில் செல்போனில் பேசிக் கொண்டே தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு வெளியே வந்தவர் இரவு 9:30 மணி ஆகியும் வீட்டுக்கு திரும்பாததால் முத்தையாவின் சகோதரர்கள் தங்களது வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப்புறங்களில் தேடி உள்ளனர்.

அப்போது காரம்பாடு ஓடை பகுதியின் ஓரத்தில் முத்தையா கழுத்து வயிறு மற்றும் முதுகு பகுதிகளில் கத்திக்குத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து சம்பவம் அறிந்த திசையன்விளை காவல்துறையினர் முத்தையாவின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் நெல்லை எஸ்.பி.யான சிலம்பரசன், வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ் குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை சுதாவின் உறவினர் வீடுகள் அமைந்துள்ள இட்டமொழி படப்பார்குளம் பகுதிகளில் தேடி வருகின்றனர்.

மேலும் மோப்ப நாய் உதவியுடன் கொலை சம்பவம் நடைபெற்ற காரம்பாடு பகுதியிலும் காவல்துறையினர் துப்பு துலக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் காதலினால் ஏற்பட்ட கொலை என்பதால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க திசையன்விளை பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.