கொரோனா காலத்தில் ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதல்… 3 கொலையில் முடிந்த திருமணம்!!

808

அஸ்ஸாமில்..

அஸ்ஸாம் மாநிலம், கோலாகட் மாவட்டத்தில் வசிப்பவர் நஜ்பூர் ரஹ்மான். இவரின் மனைவி சங்கமித்ரா கோஷ் (24). இருவருக்கும் 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஜூன் மாதத்தில் ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. பொறியாளரான நஜ்பூர் சங்கமித்ராவுடன் பழகிய சில மாதத்தில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.

உடனே அதே ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கொல்கத்தா சென்று திருமணம் செய்துகொண்டனர். ஆனாலும் சங்கமித்ராவை அவரின் பெற்றோர் வீட்டுக்கு அழைத்துவந்தனர்.

ஆனால், சங்கமித்ரா வீட்டிலிருந்து நகைகளைத் திருடிவிட்டதாக அவரின் பெற்றோரே போலீஸில் புகார் செய்தனர். அதனடிப்படையில் சங்கமித்ரா கைதுசெய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் இருந்தார். சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு மீண்டும் தன் பெற்றோர் வீட்டுக்கே சென்றார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் சங்கமித்ரா நஜ்பூருடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இருவரும் சென்னைக்குச் சென்று சில மாதங்கள் வசித்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் அவர்கள் மீண்டும் கோலாகட்டுக்குத் திரும்பிவந்தனர். சங்கமித்ரா கர்ப்பமாக இருந்தார்.

கடந்த நவம்பரில் சங்கமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், கடந்த மார்ச் மாதம் தன் கணவர் தன்னை சித்ரவதை செய்வதாகக் கூறி போலீஸில் புகார் செய்தார். இதனால் நஜ்பூர் கைதுசெய்யப்பட்டார். சங்கமித்ரா தன் குழந்தையோடு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

நஜ்பூர் ஒரு மாதம் சிறையில் இருந்துவிட்டு வெளியில் வந்தபோது தன்னுடைய குழந்தையைப் பார்க்க விரும்பினார். ஆனால், சங்கமித்ராவின் குடும்பத்தினர் அதற்கு அனுமதிக்கவில்லை. அதோடு சங்கமித்ராவின் வீட்டுக்குச் சென்ற நஜ்பூர் தாக்கப்பட்டார். மீண்டும் நஜ்பூர் தன் மகனைப் பார்க்கச் சென்றார்.

இம்முறை இரு தரப்புக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் நஜ்பூர் தன்னுடைய மனைவி மற்றும் அவரின் பெற்றோரைக் கொலைசெய்தார். பின்னர் தன் ஒன்பது மாதக் குழந்தையை எடுத்துக்கொண்டு போலீஸ் நிலையத்தில் சென்று சரணடைந்தார்.

போலீஸார் சங்கமித்ராவின் வீட்டுக்குச் சென்றபோது மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.