விபத்துக்குள்ளான வவுனியா இளைஞனுக்கு மாஞ்சோலை வைத்தியர்களின் அசமந்தப்போக்கினால் நடந்த பரிதாபச் சம்பவம்!!

440

Accident

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற வற்றாப்பளை வருடாந்த பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக வவுனியாவைச் சேர்ந்த சஞ்சீவன் என்ற இளைஞன் தனது மூன்று நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு – நெடுங்கேணி வீதியில் தண்டுவன் பகுதியியில் பயணித்தபோது நண்பர்கள் இருவரினதும் இரு சக்கர வண்டி பல மீட்டர்கள் முன்னோக்கி பயணித்தபோது இரு சக்கர வாகனத்தில் தனியாக பயணம் செய்த சஞ்சீவன் வீதியின் குறுக்கே பாய்ந்த மாட்டுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார்.

பலத்த காயமடைந்த சஞ்சீவன் மூக்கிலும் காதிலும் இரத்தம் வெளிவந்த நிலையில் நடு வீதியில் கிடப்பதைப் பார்த்த வீதியில் சென்ற பயணிகள் சிலர் அவரை மாஞ்சோலை வைத்தியசாலையில் இரவு 9 மணியளவில் அனுமதித்துள்ளனர்.

மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அம்புலன்ஸ் வண்டி நெடுங்கேணியை அண்மித்த போது அம்புலன்ஸ் ஓட்டுனருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அழைப்பில் மாஞ்சோலை வைத்தியர் ஒருவர் தான் உடனடியாக வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் எனவும் உடனடியாக மீண்டும் வைத்தியசாலைக்கு திரும்பி வருமாறும் அம்புலன்ஸ் ஓட்டுனருக்கு பணித்துள்ளார். வைத்தியரின் கட்டளையை மீற முடியாத அம்புலன்ஸ் ஓட்டுனரும் புலம்பியவாறு மீண்டும் அம்புலன்ஸ் வண்டியை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு திரும்பிச் சென்றுள்ளார்.

வலியினால் துடித்த விபத்தில் காயமடைந்த இளைஞன் மீண்டும் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அதே வேளை, அழைப்பை மேற்கொண்ட வைத்தியர் தனது சகாக்களுடன் வற்றாப்பளை ஆலயதிற்கு பொங்கல் வைப்தற்கான பொருட்களுடன் சென்றுள்ளார்.

இதனை அறிந்த காயப்பட்டவர்களின் நண்பர்கள் சிலர் வைத்தியசாலை ஊழியர்களுடன் இது சம்பந்தமாக வினவியபோதும் சரியான பதில் கிடைக்காத காரணத்தினால் ஊழியர்களுடன் முரண்பட்டுள்ளனர். காயப்பட்டவரை தாங்கள் வான் வண்டி ஒன்றின் மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல அனுமதி கோரிய போதும் வைத்தியசாலை ஊழியர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை.

இறுதியில் பல மணி நேரங்கள் தாமதமாக அதிகாலை 2 மணியளவில் அம்புலன்ஸ் வண்டி வந்ததன் பின்னர் காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

மிகவும் உயரிய, உயிர் காக்கும் சேவையான மருத்துவத் துறையில் உள்ள ஒரு சில வைத்தியர்களின் இது போன்ற செயல்களைச் செய்வது மிகவும் வருந்தத்தக்கது.