குழந்தை இல்லனு அடிக்கிறான், சாகப்போறேன்மா.. இளம் பெண் தற்கொலை.. பதைபதைக்க வைக்கும் கடிதம்!!

1005

புதுச்சேரியில்..

திருமணமாகி நான்கு வருடமாகியும் குழந்தை இல்லை என்ற காரணத்தால்… கணவன், மனைவியை தாக்கியதில் மனமுடைந்த மனைவி வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் புதுவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



புதுச்சேரி மாநிலம், திருக்கனூர் அருகே உள்ள ரோஜா நகர் கே.மணவெளியைச் சேர்ந்தவர்கள் அரவிந்த் – மோனிகா தம்பதி. இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக் கின்றனர்.

இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகும் நிலையில், குழந்தை இல்லை. இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி மாலை மோனிகா தன் தாய் உண்ணாமலையிடம், தன் கணவருக்கும் தனக்கும் இடையே நடக்கும் பிரச்னை பற்றிக் கூறியுள்ளார்.

அப்போது, மறுநாள் நேரில் வந்து பார்ப்பதாக உண்ணாமலை கூறியுள்ளார். கடந்த 26-ம் தேதி காலை, உண்ணாமலை தன் மகளுக்கு செல்போன் மூலமாக பலமுறை தொடர்புகொண்ட போதும், அவர் அழைப்பை ஏற்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவர், திருக்கனூர் பகுதியில் உள்ள தன் மூத்த மகளை அனுப்பி மோனிகாவை வீட்டில் சென்று பார்க்கச் சொல்லியுள்ளார். அவர் சென்று பார்த்தபோது கதவு மூடி இருந்திருக்கிறது.

இதனால் சந்தேகமடைந்தவர், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது மோனிகா புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பான தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருக்கனூர் போலீஸார், மோனிகாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே மோனிகாவின் செல்போனை உறவினர்கள் பார்த்தபோது, அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக இரண்டு வீடியோக்களை பதிவு செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

அந்த வீடியோவில் பேசும் மோனிகா, “என்னால இவன்கிட்ட இருக்க முடியலம்மா. என்னை அடிக்கிறான்மா… தலையில ஒரே வலி. ராத்திரி போட்டு அடிச்சிட்டான்மா. `உன் வீட்டுல இருந்து என்ன பண்ணுறாங்க…

உன்னால பிள்ளை பெத்துக் கொடுக்க முடியலனா நீ எதுக்கு இருக்க… நீ போ, நான் வேறொரு கல்யாணம் பண்ணி பிள்ளை பெத்து காண்பிக்கிறேன்’னு சொல்லி, என்னப் போட்டு அடிக்கிறான்மா.

`உன் ஜாமானை எல்லாம் தூக்கிக்கினு போ, இனி நான் உடன்கூட இருக்க மாட்டேன், செத்துரு போ’னு அடிக்கிறான்மா. நான் சாகப்போறேன்மா, என்னால இவன்கிட்ட இருக்க முடியலம்மா…

நான் செத்துட்டா, நீ யாரையும் சும்மா விடாதம்மா. நான் செத்துட்டாலும் உன் கூடவேதான் இருப்பேன்மா, நீ அழுவாத… அப்பாவை பாத்துக்க, அம்மா நான் போறேன்” என அழுதபடியே தன் தாய்க்கு அவர் அந்த வீடியோ பதிவை செய்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும், “என் இறப்புக்கு காரணம் என் கணவர், அவர் அம்மா, அப்பா, தம்பி. என்னை வரதட்சணை கேட்டு அடிக்குறாங்க. கல்யாணம் ஆகி 5 வருடம் ஆகப்போகுது, குழந்தை பிறக்கலனு என் கணவர் என்னை தினமும் அடிக்கிறாரு.

என்னால இதுக்கு மேல உயிரோடு இருக்க முடியல. இவங்க யாரையும் சும்மா விடாதீங்க” என்று மோனிகா எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று வெளியாகி மேலும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் திருக்கனூர் போலீஸார், கணவர் அரவிந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுமட்டுமன்றி, மோனிகா தற்கொலை செய்துகொண்ட தகவலை அறிந்த அவரின் பாட்டி ரங்கம்மா அதிர்ச்சியில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவன் திட்டி தாக்கியதில், மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் புதுவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.