செல்பியால் உயிரிழந்த புதுமண தம்பதி.. காப்பாற்றச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்.!!

735

கேரளாவில்..

கேரளாவில் பாறையில் நின்று கொண்டு செல்பி எடுக்கச் சென்ற புதுமண தம்பதி ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். கேரளாவில் பாறைகள் நின்று செல்பி எடுத்த புதுமண தம்பதி ஆற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் அவர்களைக் காப்பாற்றச் சென்ற உறவினர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 29 வயதான சித்திக்.

இவருக்கு 25 வயதில் நவ்ஃபியா என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. புதுமண தம்பதியான இவர்கள் பாரிப் பள்ளியை அடுத்துள்ள பள்ளிக்கால் என்ற பகுதியில் உள்ள தனது உறவினரான அன்சில் என்பவரின் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றுள்ளனர்.

தம்பதிகள் தங்களது மதிய விருந்து முடித்துவிட்டு நேற்று முன்தினம் மாலை இருவரும் பொழுது போக்குவதற்காக அருகில் இருக்கும் ஆற்றுப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அவர்களோடு நண்பர் அன்சில் குடும்பத்தினரும் சென்றுள்ளனர்.

அப்போது புதுமண தம்பதி ஆற்றின் கரையோரம் இருந்த பாறையின் மேல் நின்று கொண்டு செல்பி எடுக்க ஆசைப் பட்டுள்ளனர். அப்போது பாறையில் இருந்து திடீரென ஆற்றுக்குள் இருவரும் கவிழ்ந்து விழுந்துள்ளனர்.

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் சத்தம் போட்டு உள்ளனர். உடனே இருவரையும் காப்பாற்றுவதற்காக அன்சில் ஆற்றில் குதித்துள்ளார். ஆனால் அவரும் அந்த ஆட்சியில் மூழ்கியுள்ளார். இதனைக் கண்டு அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினர், ஆற்றின் மூழ்கிய மூன்று பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். வெகு நேரம் கழித்துக் காப்பாற்றச் சென்ற அன்சில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

ஆனால் புதுமணத் தம்பதி உடல்கள் கிடைக்கவில்லை. இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் நேற்று காலை தேடும் பணியில் ஈடுபட்டபோது புதுமணத் தம்பதி உடல்கள் பாறையின் இடுக்கில் சிக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் இருவரின் உடலும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்பி எடுப்பதற்காக ஆசைப்பட்டு புதுமணத் தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்த கொடூர சம்பவம் கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.